Crime: ரவுடிகள் வெளியிட்ட இன்ஸ்டா பதிவுகள் - கோவை போலீஸ் அதிர்ச்சி
ஸ்ரீராம் பெயரில் ஸ்ரீராம் பிரதர்ஸ், ஸ்ரீராம் ப்ளட்ஸ், தெல்லவாரி போன்ற பெயர்களில் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் திறக்கப்பட்டு, விரைவில் பழி தீர்க்கப்படும் என்று அடிக்கடி ஸ்டோரி போடப்பட்டு வந்துள்ளன.
கோவை நீதிமன்றம் அருகே கடந்த 13 ம் தேதி பட்டப்பகலில் கோகுல் என்பவரை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற மனோஜ் என்பவருக்கு தலை மற்றும் கையில் கத்தி குத்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பந்தய சாலை காவல் துறையினர் உயிரிழந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மனோஜ் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து காவல் துறையினர் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பதிவான சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றிய காவல் துறையினர், 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கட்டப்பட்டு பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த 7 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் ஹரி, பரணி செளந்தர், கெளதம், அருண்குமார், ஜோஸ்வ தேவ்பிரியன், சூரியா, டேனியல் ஆகியோர் என்பதும், அவர்கள் கோகுலை கொலை செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் நீலகிரி காவல் துறையினர், கோவை தனிப்படை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல் துறையினர் 7 பேரையும் கோவைக்கு அழைத்து வந்தனர்.
அப்போது மேட்டுப்பாளையம் வன கல்லூரி முன்பாக கெளதம், ஜோஸ்வா ஆகியோர் திடீரென வாந்தி, தலை சுற்றுதல் ஏற்படுவதாகவும், இயற்கை உபாதை கழிக்க வேண்டுமென வற்புறுத்தி வாகனத்தை நிறுத்தி இருவரும் தப்பிச் செல்ல முயன்றதாகவும், காவலர்கள் அவர்களை விரட்டும் போது ஒரு புதரில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஒரு காவலரை தாக்கியதில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. காவல் துறையினர் எச்சரித்தும் நிற்காமல் தாக்க முயன்றதால் தற்காப்பிற்காக இருவரையும் காலில் துப்பாக்கியால் எஸ்.ஐ. சுட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருவருக்கும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் கொலை செய்ய உதவியதாகவும், வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுத்தகாவும் விக்ரம், விக்னேஷ், கார்த்திக் ஆகிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதனிடையே ரத்தினபுரி, கண்ணப்பநகர் பகுதிகளில் ரவுடிகளின் பலத்தை காட்டும் வகையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, கடந்த 2021ம் ஆண்டு குரங்கு ஸ்ரீராம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் கோகுல் கொலை செய்யப்பட்டார் என்பது காவல் துறை விசாரணையில் தெரியவந்தது. மேலும் இரு தரப்பினரும் இன்ஸ்டாகிராமில் தங்களுக்குள் மோதிக் கொண்டது தெரியவந்துள்ளது.
2021 இல் இருந்த ஸ்ரீராம் பெயரில் ஸ்ரீராம் பிரதர்ஸ், ஸ்ரீராம் ப்ளட்ஸ், தெல்லவாரி போன்ற பெயர்களில் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் திறக்கப்பட்டு, ரத்தினபுரி என்ற பகுதியின் பெயரிலும் ஸ்ரீராம் இறப்பிற்கும் விரைவில் பழி தீர்க்கப்படும் என்று அடிக்கடி ஸ்டோரி போடப்பட்டு வந்துள்ளன. இத்தகைய சூழலில் தான் கோகுல் நீதிமன்றம் அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதனிடையே இந்த கொலை வழக்கில் கைது கைது செய்யப்பட்ட இளைஞர் சிலரது பெயரிலும் திறக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை அண்ணன்கள், ஹீரோக்கள் போலவே சித்தரித்து பாடல்களை வைத்து எடிட் செய்து பதிவிட்டுள்ளாதாகவும் சொல்லப்படுகிறது. பட்டா கத்தி, துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கானா பாடல்களுடன் ரீல்ஸ்களையும் பகிர்ந்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.