Crime : கோவையில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள், கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் ; போலீசார் அதிரடி நடவடிக்கை
ஒரே நாளில் இரண்டு வழக்குகளிளும் சேர்த்து மொத்தம் 2 டன் எடை கொண்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் 20 இலட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் 2 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் சூலூர் காவல்துறையினருக்கு குட்கா பொருட்களை விற்பனைக்கு கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில், நீலாம்பூர் லீமெரிடியன் அருகே வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து கோவை நோக்கி வந்த ஆம்னி பஸ்ஸை சோதனை செய்து பார்த்த போது அதில் ½ டன் எடை கொண்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு பேருந்திற்குள் மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த செந்தில்குமார்(47), மெகப்பு பாஷா(30), செந்தில் ராஜா (44) மற்றும் ஜெயப்பிராகாஷ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ½ டன் புகையிலைப் பொருட்கள் மற்றும் அதனை கடத்தி வர பயன்படுத்திய ஆம்னி சொகுசு பஸ் மற்றம் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருட்களை வாங்குவதற்கு வந்த டவேரா கார் மற்றும் ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கிடைத்த தகவலின் பேரில் மயிலம்பட்டி பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பரத் பட்டேல்(26), அமரராம்(22), கோபால்(22) மற்றும் 4மைபால்(22) ஆகியோர் குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த காவல் துறையினர், சுமார் 1½ டன் எடை கொண்ட குட்கா பொருட்கள், 2 கார்கள், 2 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 20 இலட்சத்து ஆயிரத்து 800 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
ஒரே நாளில் இரண்டு வழக்குகளிளும் சேர்த்து மொத்தம் 2 டன் எடை கொண்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
ஐம்பொன் சிலை பறிமுதல்
கோவை உக்கடம் - செல்வபுரம் புறவழிச் சாலையில் பாஸ்கர சுவாமிகள் என்ற சாமியார் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நான்கு அடி ஐம்பொன் முருகர் சிலை வைத்துள்ளது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான காவல் துறையினர் பாஸ்கர சுவாமிகள் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் மூன்று மணி நேரம் பாஸ்கர சுவாமிகளிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது நான்கு அடி ஐம்பொன் முருகர் சிலையை பாஸ்கர சுவாமிகள் வீட்டில் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி சிலை வைத்திருப்பது தெரியவந்ததை அடுத்து, அச்சிலையை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் பாஸ்கர சுவாமிகள் அவரே சிலையை தயாரிப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். சிலை தயாரிப்பது போன்ற வீடியோக்களையும் அதிகாரிகளிடம் தயாரித்ததற்கு சான்றாக காண்பித்துள்ளார். இருப்பினும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் ஆவணங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிலை சுமார் 200 கிலோ வரை இருக்கும் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.