புதுக்கோட்டையில் திருடனை விரட்டி பிடித்த பொதுமக்கள்- போலீஸ் விசாரணை
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கொள்ளையர்களை விரட்டி பிடித்த பொதுமக்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகளில் ஒருவர், அதிகாலை நேரத்தில் எழுந்து, வீட்டை திறந்து வெளியில் வந்துள்ளார். அப்போது அவர் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து இரண்டு மர்ம நபர்கள் எகிறி குதித்து ஓடுவதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் சத்தம் போட்ட அவர் சம்பந்தப்பட்ட வீட்டில் வசிப்பவர்களை எழுப்பி இரண்டு மர்ம நபர்கள் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்து எகிறி குதித்து ஓடுவதை கூறி உள்ளார். இதனை தொடர்ந்து அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை அவர்கள் பார்த்து உள்ளனர். அப்போது இரண்டு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து வீட்டை நோட்டமிடுவதும், அதன் பின்னர் வீட்டின் சுவரை ஏறி குதிப்பதும் அதில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது.இதனை அடுத்து அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு அந்த இரண்டு மர்ம நபர்களையும் தேடி வந்த நிலையில் அந்த இருவரும் அதிகாலையில் சுவர் ஏறிகுதித்த அதே உடையில் ஆலங்குடி வடகாடு முக்கம் பகுதியில் அதே இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த போது அவர்களை அடையாளம் கண்ட அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுடன் சேர்ந்து அந்த இருவரையும் விரட்டி சென்றுள்ளனர்.
மேலும் அந்த இரண்டு இளைஞர்களும் பொதுமக்கள் விரட்டி வருவதைப் பார்த்து இருசக்கர வாகனத்தில் வேகமாக புதுக்கோட்டை சாலையில் சென்றுள்ளனர். ஆலங்குடி அடுத்த அம்புலி ஆறு பாலம் அருகே நிலை தடுமாறி விழுந்துள்ளனர். பின்னர் இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு ஓடும்போது பொதுமக்கள் அந்த இரண்டு இளைஞர்களையும் விரட்டி பிடித்துள்ளனர். அதன் பின்னர் அவர்களை ஆலங்குடிகாவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் சிசிடிவி கேமிரா பதிவும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இரண்டு பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கோயமுத்தூர் மாவட்டம் கள்ளுப் பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் சிவப்பிரகாசம் (வயது 31) என்பதும் , நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அரக்கார் ராமர் மகன் பிரசாந்த் (வயது 24) என்பதும் தெரிய வந்தது. மேலும் அந்த இரண்டு இளைஞர்களும் வந்த இருசக்கர வாகனம் ஈரோடு மாவட்டத்தில் திருடப்பட்ட வாகனம் என்பதும் தெரியவந்தது.
மேலும் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களுக்கு காயம் ஏற்பட்டிருந்த காரணத்தால், முதலுதவி சிகிச்சைக்காக ஆலங்குடி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இவர்கள் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க கூடும் என்ற சந்தேகம் போலீசாரிடம் எழுந்ததால், அது குறித்து விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக, இருவரும் புதுக்கோட்டை கிரைம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் ஆலங்கு டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.