மாமனார் கடத்தல்! 2 திருமணம் ஆனதை மறைத்து அக்கா, தங்கையை கல்யாணம் செய்த நபர் - நடந்தது என்ன?
ஏற்கனவே 2 திருமணம் ஆனதை மறைத்து அக்கா மற்றும் தங்கையை திருமணம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, கொடுங்கையூரில் அமைந்துள்ளது அம்பேத்கர் தெரு. இங்கு வசித்து வருபவர் சாமுவேல். இவருக்கு வயது 55. இவருக்கு சோனியா, சொர்ணா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் வயது 23 ஆகும். அக்காள், தங்கையான இவர்கள் இருவரும் ஆழ்வான் ( வயது 35) என்ற நபரை திருமணம் செய்துள்ளனர்.
மாமனாரை கடத்திய மருமகன்:
இந்த நிலையில், அக்காள் தங்கையான இவர்கள் இருவரும் கொடுங்கையூர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரில் தங்களது கணவனான ஆழ்வான் தங்களது தந்தை சாமுவேலை கடத்தி மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் அளித்த புகாரையடுத்து, போலீசார் செல்போன் சிக்னல் அடிப்படையில் மாதவரம் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட சாமுவேலை மீட்டனர். பின்னர் ஆழ்வானை கைது செய்தனர்.
போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியானது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆழ்வான். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இவர் சோனியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 1 வருடத்திற்கு முன்பு சோனியா கர்ப்பம் அடைந்துள்ளார். அப்போது, அவர் சோனியாவை கவனித்துக் கொள்வதற்காக சொர்ணா சென்றுள்ளார்.
அக்காள் - தங்கையுடன் திருமணம்:
அப்போது, சோனியாவை கவனித்துக் கொள்ளச் சென்ற சொர்ணாவிற்கும் ஆழ்வானுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், மனைவி சோனியாவிற்கு தெரியாமல் ஆழ்வான் சொர்ணாவை திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த சோனியா அதிர்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும் உடன்பிறந்த தங்கை என்பதால் இதை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், ஆழ்வான் திருவள்ளூர் வேப்பம்பட்டில் தனித்தனியாக வீடு எடுத்து இருவரையும் தங்க வைத்துள்ளார்.
ஆழ்வானுக்கு முறையான வேலை இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், மதுப்பழக்கமும் இருந்துள்ளது. இதனால், மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஆழ்வான் முறையாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால், அக்காள் தங்கை இருவருக்கும் ஆழ்வானுக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, சோனியாவும், சொர்ணாவும் தங்களது தந்தை வீட்டிற்கு கோபித்துச் சென்றனர். ஆழ்வான் பல முறை அவர்கள் இருவரையும் அழைத்துள்ளார். ஆனால், அக்காள் - தங்கை இருவரும் வர மறுத்துவிட்டனர்.
ஏற்கனவே 2 திருமணம்:
இதனால், மாமனார் சாமுவேலை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதுபோல அழைத்து மது வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர், அவரை மாதவரத்தில் உள்ள பாழடைந்த வீட்டில் அடைத்துள்ளார். மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் ஆழ்வான் சோனியாவை திருமணம் செய்வதற்கு முன்பே இரண்டு பெண்களை திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. இதைக்கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது ஆழ்வான் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே 2 திருமணமானதை மறைத்து அக்காள் தங்கையை திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: பெரியகுளம் அருகே ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது
மேலும் படிக்க: IIT Student Death: ஐ.ஐ.டி.யில் தொடரும் மர்மம்! ஒரே மாதத்தில் கதிகலங்க வைக்கும் மூன்றாவது தற்கொலை - என்னாச்சு?