Crime: ஆன்லைனின் பறிபோன பணம்.. நண்பர்களிடம் கடன்...படம் பார்த்து கொள்ளையனாக மாறிய இன்ஜினீயர்!
சென்னை அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கொள்ளையனாக மாறிய இன்ஜினீயரை காவல்துறையினர் கைது செய்தனர்.
![Crime: ஆன்லைனின் பறிபோன பணம்.. நண்பர்களிடம் கடன்...படம் பார்த்து கொள்ளையனாக மாறிய இன்ஜினீயர்! Chennai: Police arrested engineer who became a robber after losing money in online gambling Crime: ஆன்லைனின் பறிபோன பணம்.. நண்பர்களிடம் கடன்...படம் பார்த்து கொள்ளையனாக மாறிய இன்ஜினீயர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/08/095f5500a6a1712d3cda7f99845f3e701662618509091175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கொள்ளையனாக மாறிய இன்ஜினீயரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவருடைய உறவினர் திருமண நிகழ்ச்சி சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்செல்வி சென்னை வந்திருந்தார். அவர், திருமண மண்டபம் நோக்கி நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென்று அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளார்.
சுதாரித்துக்கொண்ட தமிழ்செல்வி, திருடன் என்று சத்தமாக கூச்சலிட்டார். அவருடைய சத்தம் கேட்டு காலையில் வாக்கிங் சென்றவர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து அவரை அசோக்நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவரை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் கைது செய்து விசாரணை நடத்தினார். அதில் அவர், கே.கே. நகர் பகுதியை சேர்ந்த இன்ஜினீயரான 24 வயதான சரவணன் என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியது. அதன்படி, “நான் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறேன். நான் 'ஆன்லைன்' சூதாட்ட மோகத்தில் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்துவிட்டேன்.
நெருங்கிய நண்பர்களிடமும் கடனாளி ஆனேன். கடன் அன்பை முறிக்கும் என்பதற்கு ஏற்ப நண்பர்களும் எதிரிகளாக மாறினர். கொடுத்த பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இது எனக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. என்னுடைய வருமானத்தில் இந்த கடனை உடனடியாக அடைக்க முடியாது என்பதால், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைத்தேன். அப்போது சில திரைப்படங்களில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நினைவுக்கு வந்தது. எனவே சிக்காமல் நகை பறிப்பது? எப்படி என்பதை சமூக வலைத்தளங்களில் உள்ள திரைப்பட காட்சிகளை மீண்டும், மீண்டும் பார்த்தேன். அதன்படி நகைப்பறிப்பில் ஈடுபட்டேன். நகைப்பறித்தவுடன் பதற்றம் அடைந்து விட்டேன். இதனால் நான் சிக்கிவிட்டேன்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுமா..?
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் சந்திரு தலைமையிலான குழு கடந்த ஜூலை மாதம் 28 ம் தேதி தனது பரிந்துரைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தார். தொடர்ந்து அந்த அறிக்கையில் உள்ள விஷயங்கள் குறித்தும், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது பற்றியும் அன்றைய தினமே அமைச்சரவை கூட்டத்தில் துறை வாரியாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
71 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் அதனை விளையாடுபவர்களின் திறன்கள் எந்த விதத்திலும் அதிகரிப்பதில்லை என்றும் மாறாக அவர்களுடைய திறன்களை குறைக்கும் வேலைகளையே ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகள் செய்கின்றன. விளையாடும் நபர்களை ஆன்லைன் விளையாட்டுகள் அடிமையாக்குன்றன என்றும் அதோடு அவர்களை கடனாளியாக்கும் திட்டத்துடனே அவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணம் இழப்பு அபாயம் இருப்பதாக கூறி தடை போடப்பட்ட நிலையில், அவை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன. ஆனால், இந்த முறை இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளால் பொதுமக்களின் உடல் நலம் மற்றும் மன நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மக்களின் நல்வாழ்விற்காக இந்த ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் உரிமையும் அதிகாரமும் மாநில அரசுக்கு இருப்பதாகவும், அதன் அடிப்படையில் தடை செய்தால், நீதிமன்றம் தலையிட முடியாது.
அதேபோல், ஆன்லைன் விளையாட்டுகளால் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 17 மரணங்கள் நிகழ்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள நீதியரசர் சந்துரு, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை மேற்கொள்ளும் நிறுவனங்களின் பிரதான நோக்கம் லாபமாக இருக்கிறதே தவிர, விளையாடுபவர்களின் திறன்களை மேம்படுத்துவதாக இல்லை. அதனால், இதுபோன்ற விளையாட்டுகள், விளையாட்டுகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு கூட தகுதியற்றவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுகள் என்பது உடலினை உறுதி செய்வதாகவும், மனதினை தெளிவுப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்ற நிலையில், ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகள், மொபைல், கம்யூட்டர் போன்ற இயந்திரங்கள் மூலம் விளையாடும் நடைமுறையாக இருக்கிறது. இது விளையாடிய பின், அவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எந்தவிதமான புத்துணர்ச்சியையும் தராமல், மாறாக மன அழுத்தத்தை தருகிறது என நீதியரசர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)