“மயக்கம் வருது தண்ணீ கொடுங்க” பரிதாபப்பட்ட நபருக்கு பட்டை அடித்த இளைஞர் - டிரைவருக்கு நேர்ந்த சோகம்
கால் டாக்சியில் பயணித்து ஓட்டுநரின் கவனத்தை திசை திருப்பி கால் டாக்சியை திருடிச் சென்ற நபர் கைது.

App - ல் வந்த புக்கிங் ஆர்டர்
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் ( வயது 43 ) என்பவர் சென்னையில் தங்கி சொந்தமாக கால் டாக்சி கார் (Tata Indica) ஓட்டி வருகிறார். சுரேஷ்குமார் கடந்த 11.07.2025 அன்று இரவு ஒரு வாடிக்கையாளரை கோயம்பேட்டில் இறக்கி விட்டு காத்திருந்தபோது நள்ளிரவு பூந்தமல்லி செல்ல வேண்டி வந்த அடுத்த புக்கிங்கில் தொடர்பு கொண்ட முகமது என்ற நபரை கோயம்பேட்டில் ஏற்றிக் கொண்டு செல்லும் போது வாடிக்கையாளர் மயக்கம் வருவது போல உள்ளது குடிக்க தண்ணீர் வேண்டும் கடையின் அருகில் நிறுத்துங்கள் என கூறியுள்ளார்.
காரை திருடி சென்ற நபர்
உடனே சுரேஷ்குமார் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு கடையின் அருகில் காரை நிறுத்தி விட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வருவதற்குள் வாடிக்கையாளராக வந்த முகமது என்பவர் மேற்படி கால் டாக்சி காரை திருடிச் சென்று விட்டார். இது குறித்து சுரேஷ்குமார் K-10 கோயம்பேடு காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். K-10 கோயம்பேடு காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாணை செய்து மேற்படி வழக்கில் காரை திருடிச் சென்ற சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த முகமது அஜ்மல் ( வயது 27 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகார் தாரரின் கால் டாக்சி கார் (Tata Indica) மீட்கப்பட்டு , புக்கிங் செய்ய பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் முகமது அஜ்மல் மீது ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டம், மணவாளன் நகர் காவல் நிலையத்தில் தமிழ்நாடு பென் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவில் ஒரு வழக்கு உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட முகமது அஜ்மல் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
போதை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வெளி மாநிலத்தவர்கள் 2 பேர் கைது. 54.3 கிலோ மாவா மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல்
சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருவல்லிக்கேணி எல்லீஸ் ரோடு தௌலத்கான் தெருவில் தீவிரமாக கண்காணித்து அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த உத்திரபிரதேசம் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் பதக் ( வயது 23 ) , வினோத்குமார் சூர்யமணி பதக் ( வயது 32 ) ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 54.3 கிலோ எடை கொண்ட மாவா மற்றும் மாவா தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களான ஜர்தா, பாக்கு , சுண்ணாம்பு மற்றும் 2 கிரைண்டர்கள் மற்றும் பணம் ரூ.200 பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.




















