குருவி விஜய்க்கு டஃப் கொடுக்கும் 25 குருவிகள்.. கொத்தாக சிக்கியது எப்படி? பரபரப்பான சென்னை ஏர்போர்ட்!
சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு,3 விமானங்களில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.15 கோடி மதிப்புடைய,20 கிலோ தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, 25 கடத்தல் குருவிகளான பயணிகள் கைது
சென்னை விமான நிலையத்தில், நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரையில், மத்திய வருவாய் புலனாய்வுத்துறை தனிப்படையினர் நடத்திய அதிரடி சோதனையில், இந்த கடத்தல் குருவிகள் சிக்கினார்கள்.
ரகசிய தகவல்
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வரும், விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை தனிப்படையினர் நேற்று இரவு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, ரகசியமாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நேற்று இரவு 11 மணிக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சிங்கப்பூரில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளில், சந்தேகப்படும்படியாக வந்த பயணிகள் அனைவரையும், மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் நிறுத்தி வைத்து தீவிரமாக விசாரணை நடத்தனர்.
அதோடு நள்ளிரவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்தது. அந்தப் பயணிகளையும் நிறுத்தி வைத்து சோதனை நடத்தினர். அதோடு இன்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடமும், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதிகாரிகளுக்கு சந்தேகம்
இந்தநிலையில் இந்த 3 விமானங்களில் வந்த பயணிகளில், 25 பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. இதை அடுத்து அவர்களை வெளியில் அனுப்பாமல் நிறுத்தி வைத்து விசாரித்தனர். அதோடு அவர்கள் உடமைகளிலும் சோதனையிட்டனர். அந்த சோதனையின் போது, அவர்களில் 25 பயணிகளின் உடைமைகளில், தங்கக் கட்டிகள், தங்க பசைகள் மற்றும் தங்க செயின்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
20 கிலோ தங்கம்
இந்த 25 பயணிகளில் 8 பேர் பெண் பயணிகள், மற்ற 17 பேர் ஆண் பயணிகள். இவர்கள் அனைவரும் சென்னை உட்பட தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. அதோடு அந்தப் கடத்தல் பயணிகள் 25 பேரிடம் இருந்து மொத்தம் சுமார் 20 கிலோ, சுத்தமான 24 கேரட் தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.15 கோடி.
இந்த கடத்தல் குருவிகள் 25 பேரிடமும் மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது சென்னையில் உள்ள முக்கிய கடத்தல் ஆசாமிகள் சிலர், இவர்களை சிங்கப்பூருக்கு கடத்தல் குருவிகளாக அனுப்பி, இதைப்போல் தங்கத்தை கடத்தி வந்ததாகவும், ஒரே விமானத்தில் வந்தால், சுங்கச் சோதனையில் மொத்தமாக சிக்கி விடக்கூடாது என்பதற்காக, இதைப்போல் 3 விமானங்களில் வந்ததாகவும் தெரிய வந்தது.
25 கடத்தல் பயணிகள்
இவர்களில் ஒரு பெண் உட்பட இரண்டு பயணிகளிடம் மட்டுமே ஒரு கிலோவுக்கு அதிகமான தங்கம் இருந்தது. மற்ற 23 பயணிகளிடமும், ஒரு கிலோவுக்கு குறைவாகவே தங்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதைப் போன்று ஒட்டுமொத்தமாக, தங்கம் கடத்தி வந்த சம்பவத்தில், சென்னை விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறையினர் உட்பட வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாள் இரவில், சிங்கப்பூரிலிருந்து வந்த 3 விமானங்களில், மத்திய வருவாய் புலனாய் துறையினர் அதிரடி சோதனைகள் நடத்தி, 25 கடத்தல் பயணிகளை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூபாய் 15 கோடி மதிப்புடைய 20 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ள சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.