பழகிய புகைப்படங்களை வெளியிடுவேன்... சென்னையில் இளம் பெண்ணை மிரட்டிய இளைஞர் கைது
மதுரவாயல் பகுதியில் பழகியபோது எடுத்த புகைப்படங்களை வைத்து பெண்ணை மிரட்டிய நபர் கைது.

புகைப்படங்களை வைத்து மிரட்டல்
சென்னை மதுரவாயல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 27 வயது பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த இரண்டு வருடங்களாக ஜாகீர் உசேன் என்பவருடன் பழகி வந்த நிலையில் , கருத்து வேறுபாடு காரணமாக அப்பெண் , ஜாகீர் உசேனை விட்டு விலகிச் சென்றுள்ளார். பின்பு அந்த பெண்ணிற்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதை தெரிந்து கொண்ட ஜாகீர் உசேன் , தான் பழகிய போது எடுத்த புகைப்படங்களை வைத்து திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று அப்பெண்ணை தொடர்ந்து மிரட்டியுள்ளார்.
வன்கொடுமை தடுப்பு சட்டம்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட 27 வயது பெண் , T-4 மதுரவாயல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் , போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சிறையில் அடைப்பு
T-4 மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , மேற்படி குற்ற சம்பவத்தில் தொடர்புடைய திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஜாகீர் உசேன் ( வயது 32 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஜாகீர் உசேன் , விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
உடல் வலி நிவாரண மாத்திரைகளை சட்ட விரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த 2 நபர்கள் கைது.100 உடல் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் அவர்களின் உத்தரவின்பேரில், உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கொண்ட தனிப் படையினர் தொடர்ந்து கண்காணித்து , போதைப் பொருட்களை வைத்திருப்பவர்கள், கடத்தி வருபவர்கள், பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக , P-6 கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் கொடுங்கையூர் காமராஜர் சாலையில் கண்காணித்து அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 நபர்களை விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.
பெங்களூரிலிருந்து வாங்கி வந்து விற்பனை
சந்தேகம் அதிகரிக்கவே அவர்களை சோதனை செய்த போது , உடல்வலி நிவாரண மாத்திரைகளை சட்ட விரோதமாக விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. அதன் பேரில், P-6 கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகளை வைத்திருந்த நபர்கள் 1.மகேஷ் ( வயது 36 ) 2.சுமன் ( வயது 38 ) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 100 Tapentadol மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மாத்திரைகளை பெங்களூருவிலிருந்து வாங்கி வந்தது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் மகேஷ் மீது ஏற்கனவே 9 குற்ற வழக்குகளும். சுமன் மீது 2 வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.




















