Crime : போலீஸ் போல நடித்து நகைக்கடை அதிபரை கடத்த முயற்சி..! நிஜ போலீஸை கண்டதும் தப்பியோடிய 7 பேர்!
சென்னையில் போலீஸ் என்று நடித்து நகைக்கடை அதிபரை கடத்திய மர்மகும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை முகப்பேர் பகுதியில் அமைந்துள்ளது ஜெ.ஜெ.நகர். இந்த பகுதியைச் சேர்ந்தவர் ராபின் ஆரோன். இவருக்கு வயது 35. ராபின் ஆரோனுக்கு சொந்தமாக முகப்பேர் பகுதியில் நகைக்கடை மற்றும் அடகுக்கடை நடத்தி வருகிறார். இவர் திருப்பதியிலும் தனது கடையின் கிளையை திறப்பதற்காக சென்றுள்ளார். திருப்பதியில் அந்த வேலையை முடித்துவிட்டு மீண்டும் காரில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
புழல் சிறை அருகே ஜி.என்.டி. சாலையில் ராபின் ஆரோன் வந்தபோது, அந்த வழியே மோட்டார்சைக்கிளில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் ராபின் ஆரோனின் காரை வழிமறித்து நிறுத்தியது. பின்னர், ராபின் ஆரோனை காரில் இருந்து அந்த கும்பல் கீழே இறக்கியது. ராபின் ஆரோனிடம் அவர்கள் தாங்கள் கொருக்குப்பேட்டை போலீஸ் நிலைய தனிப்படை போலீசார் என்றும், உங்களை கைது செய்ய எங்களிடம் பிடிவாரண்ட் உள்ளது என்றும் கூறியுள்ளனர். இதைக்கேட்ட ராபின் ஆரோன் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், ராபின் ஆரோனை வலுக்கட்டாயமாக அவர்களது இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
புழல் அருகே உள்ள சைக்கிள் ஷாப் பகுதியில் ராபின் ஆரோனை அழைத்துச் சென்று அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு போக்குவரத்து பணியில் ஆனந்த்குமார் என்ற போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, இவர்களை கவனித்த ஆனந்த்குமாருக்கு இவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அவர்களிடம் ஆனந்த்குமார் விசாரித்துள்ளார். போக்குவரத்து போலீசாரின் விசாரணைக்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்த அந்த கும்பல் ராபின் ஆரோனை அங்கேயே விட்டுவிட்டு தங்களது மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்றனர்.
இதன்பின்புதான், போலீஸ்போல நடித்து தன்னை விசாரணைக்கு மர்மகும்பல் அழைத்துவந்தனர் என்பது ராபின் ஆரோனுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, ராபின்ஆரோன் புழல் போலீசாரிடம் புகார் அளித்தார். ராபின் ஆரோன் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த கும்பல் யார்? நகைக்கடை அதிபரை அந்த கும்பல் கடத்தியது ஏன்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க : வேலூரில் பெண் மருத்துவர் வன்கொடுமை வழக்கு: 496 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது காவல்துறை
மேலும் படிக்க : பள்ளிக்கூட ஸ்டோர் ரூமில் ஆசிரியையுடன் உடலுறவு.. வீடியோவால் சிக்கிய ஹெட் மாஸ்டர்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்