போலி தங்க நகை அடகு வைப்பு - சென்னையில் கையும் களவுமாக சிக்கிய நபர்
சென்னை தேனாம்பேட்டையில் போலி தங்க நகைகளை அடகு வைக்க முயன்ற நபர். 26 கிராம் போலி தங்க நகைகள் பறிமுதல் செய்த போலீசார்.

நகை கடைக்கு அடகு வைக்க வந்த நபர்
சென்னை கொளத்தூர் V.P.C நகர் 1 வது தெருவில் வசித்து வரும் தினகரன் வயது ( 23 ) என்பவர் தி.நகர் பகுதியில் உள்ள இந்தியா கோல்ட் என்ற தங்க நகை கடன் வழங்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 22 ம் தேதி அன்று இந்தியா கோல்ட் தங்க நகை கடைக்கு , தங்க நகைகளை அடமானம் வைக்க வந்த நபர் ஒருவர் சுமார் 26 கிராம் எடையுள்ள 1 மோதிரம் மற்றும் 1 டாலரை அடகு வைக்க கொடுத்துள்ளார். அப்போது பரிசோதனை செய்த போது , அது போலி நகைகள் என தெரிய வந்தது. இதுகுறித்து , அந்த நிறுவனத்தில் பணி புரியும் தினகரன் என்பவர் , E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஏற்கனவே நிலுவையில் உள்ள குற்ற வழக்கு
E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட மதுரை மாவட்டம் திருமங்கலம் , அப்பக்கரை வடக்கு தெரு பகுதியை சேர்ந்த தனஞ்செயன் ( வயது 30 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 26 கிராம் எடையுள்ள போலி தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட தனஞ்செயன் மீது ஏற்கனவே ஒரு குற்ற வழக்கு உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட தனஞ்செயன் விசாரணைக்குப் பின்னர் , நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
அடிக்கடி லேப்டாப் பழுது, நிறுவனத்தை மீட்டுத் தர ரூ.23 லட்சம் பண மோசடி
சென்னை நங்கநல்லூர் ஜெயின் ஸ்டாஃப் காலனியில் வசித்து வரும் சங்கராமன் ( வயது 48 ) என்பவர் வேளச்சேரி!பஜனை கோயில் தெரு , டேனியல் வணிக வளாகத்தில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.
நிறுவனத்தை புதுப்பிப்பதாக ஏமாற்று வேலை
இவரது நிறுவனத்தில் பிரவீன் சுந்தர் என்பவர் அடிக்கடி லேப்டாப் பழுது பார்க்கும் வேலை செய்து கொடுத்து பழகி வந்த நிலையில் , பிரவீன் சுந்தர் தனக்கு ஆர்த்தி என்பவருடன் திருமணம் நடந்து , நாங்கள் இருவரும் நடத்தி வரும் எம்.பி.எஸ். கம்யூனிகேஷன் என்ற நிறுவனம் மூடும் நிலையில் உள்ளதாகவும் , தாங்கள் எடுத்து நடத்தினால் நிறைய லாபம் கிடைக்கும் என கூறியதன் பேரில் , சங்கரராமன் மேற்படி எம்.பி.எஸ். கம்யூனிகேஷன் நிறுவனத்தை புதுப்பிக்க இயந்திரங்கள், செல்போன்கள் வாங்க ரூ.4,14,600/- கொடுத்ததாகவும் மேலும், அரசாங்கத்திடமிருந்து சிசிடிவி கேமராக்கள் அமைக்கவும் , பழுது பார்க்கவும் , குத்தகை பெற்றுத் தருவதாக கூறி ரூ.18,85,400/- பணத்தை பிரவீன் சுந்தர் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோரிடம் கொடுத்ததாகவும் மேலும், தனது வாடிக்கையாளர்களிடம் சர்வீஸ் செய்வதற்காக வாங்கிய செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகளை சர்வீஸ் செய்து வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்காமல் ஏமாற்றியதாகவும், மேற்படி இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி சங்கரராமன் J-7 வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் மோசடி பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் விசாரணையில் சிக்கிய நபர்
வழக்கு பதிவு செய்த பின்பு , வேளச்சேரி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில் , புகார் தாரர் குறிப்பிட்டிருந்தது உண்மையென்பதும் , புகார் தாரரை நம்ப வைத்து சுமார் ரூ.23 இலட்சம் பணம் மோசடி செய்ததும் தெரிய வந்ததின் பேரில், இவ்வழக்கில் தொடர்புடைய பிரவீன் சுந்தர் ( வயது 27 ) என்பவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பிரவீன் சுந்தர் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.




















