"உறவினர்களுக்கு போட்டோவை அனுப்புவேன் " - சென்னையில் திருமணத்துக்கு மறுத்த பெண்ணுக்கு கொலை மிரட்டல்
மதுரவாயல் பகுதியில் பழகிய பெண்ணை பற்றி செல்போனில் அவதூறு பரப்பிய நபர் கைது.

இளைஞருக்கு போதை பழக்கம்
சென்னை மதுரவாயல் பகுதியில் 26 வயதுடைய பெண் ஒருவர் தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். பெண் அவரது தோழியின் சதோதரரான நவீன் என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதற்கிடையில் , நவீனுக்கு போதை பழக்கம் உள்ளது.
உறவினர்களுக்கு புகைப்படங்கள் அனுப்பிய இளைஞர்
போதை பழக்கம் , அப்பெண்ணுக்கு தெரிய வரவே திருமணத்திற்கு மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த நவீன் , அப்பெண்ணின் செல்போனில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியும் , குறுஞ்செய்தி மூலமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் , அப்பெண்ணின் உறவினர் மற்றும் தோழிகளுடைய செல்போன்களுக்கு இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை அனுப்பி அவதூறு பரப்பியுள்ளார்.
இது குறித்து , பாதிக்கப்பட்ட பெண் T-4 மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் , பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) , தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் (IT Act) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. S-7 மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , மேற்படி குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட கொளத்தூர் பகுதியை சேர்ந்த நவீன் ( வயது 26 ) என்பவரை கைது செய்தனர்.
குற்ற செயலுக்கு பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நவீன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு , நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
தம்பியை கத்தியால் தாக்கி , கொலை முயற்சியில் ஈடுபட்ட அண்ணன் கைது
சென்னை புளியந்தோப்பு போகிபாளையம் பகுதியில் சஞ்சய் ( வயது 23 ) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சஞ்சயின் அண்ணன் ஜவஹர் அடிக்கடி மது போதையில் வீட்டிற்கு வந்து தாயார் குமுதாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 01.07.2025 அன்று காலை , சஞ்சய் மற்றும் அவரது தாயார் குமுதா வீட்டில் இருந்த போது, ஜவஹர் மீண்டும் அவரது தாயாரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது சஞ்சய் , ஜவஹரை சத்தம் போட்டபோது, ஆத்திரமடைந்த ஜவஹர், சஞ்சயை தகாத வார்த்தைகள் பேசி, அவரை கத்தியால் தாக்கியுள்ளார்.
இதை தடுக்க வந்த தாயார் குமுதா மீதும் வெட்டுக் காயம் ஏற்பட்டது. தாக்குதலில் இரத்த காயமடைந்த சஞ்சய் , ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் , மேற்படி சம்பவம் குறித்து , சஞ்சய் கொடுத்த புகாரின் பேரில் , P-1 புளியந்தோப்பு காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
P-1 புளியந்தோப்பு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து , மேற்படி கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட புகார் தாரரின் அண்ணன் ஜவஹர் ( வயது 24 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட ஜவஹர் மீது ஏற்கனவே 2 கொலை முயற்சி உட்பட 7 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ஜவஹர் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.





















