மேலும் அறிய
Advertisement
மார்வாடி பெண் கொலையில் திடீர் திருப்பம் - இம்சை கொடுத்ததால் போட்டுத்தள்ளியதாக மருமகள் வாக்குமூலம்
’’பீகாரில் வசிக்கும் எனது மாமா மகன்கள் சுமித், தீபக் ஆகியோரிடம் தெரிவித்தேன். அப்போதுதான், பிரேம் கன்வரை கொலை செய்ய திட்டமிட்டோம். அதன்படி சுமித், தீபக் ஆகியோர் சென்னைக்கு வந்தனர்’’
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் மேட்டு தெருவை சேர்ந்தவர் பத்தே சந்த் (78). திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில் அடகுகடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரேம் கன்வர் (70). இவர்களுக்கு 4 மகன்கள். மூத்த மகன் கணபதி லால் (51), குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். 2வது, 3வது மகன்களான சுனில் லால் (47), பிண்டுகுமார் (44) ஆகியோருக்கு திருமணமாகி விட்டது. கடைசி மகன் கமலேஷ் குமார் (40) என்பவருக்கு திருமணமாகவில்லை.
கணபதிலால் தவிர மற்ற 3 மகன்களும் குடும்பத்துடன், பெற்றோரான பத்தே சந்த், பிரேம் கன்வர் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல அடகு கடைக்கு பத்தே சந்த்தும், மற்ற மகன்களான சுனில் லால், பிண்டுகுமார் ஆகியோரும் அவர்களது கடைகளுக்கு சென்றுவிட்டனர். சுனில் லாலின் மனைவி, வேலை விஷயமாக வெளியே சென்றிருந்தார். வீட்டில் பிரேம் கன்வர், பிண்டுகுமாரின் மனைவி சுஜாதா (27) ஆகியோர் மட்டும் இருந்தனர். இரவு 7 மணியளவில் அடகுகடையில் இருந்து வீட்டுக்கு வந்தார் பத்தே சந்த். அப்போது, வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில் பிரேம் கன்வர் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். வீட்டில் யாரும் இல்லை. தகவலறிந்து மற்ற மகன்கள் மற்றும் மருமகள்கள், உறவினர்கள் விரைந்தனர். உடலை பார்த்து கதறி அழுதனர். சுஜாதாவை காணவில்லை. இதற்கிடையில் திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பிரேம் கன்வரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து தீவிரமாக விசாரித்தனர். மேலும் வீட்டில் பிரேம் கன்வருடன் சுஜாதா இருந்ததும், அவரது உறவினர்கள், சமீபத்தில்தான் பீகாரில் இருந்து வந்திருந்ததும், திடீரென அனைவரும் மாயமானதும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் சுஜாதாவுக்கு காலில் அடிப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று சுஜாதாவிடம் விசாரித்தனர். அப்போது, ‘சிலர் எங்களது வீட்டுக்குள் புகுந்து என்னை அடித்து போட்டு விட்டு மாமியார் பிரேம் கன்வரை கொலை செய்து தப்பி சென்றனர்’ என்று கூறியுள்ளார். அப்படி என்றால் சமீபத்தில் உங்களது வீட்டுக்கு வந்த உறவினர்கள் எங்கே என போலீசார் கேட்டபோது, முன்னுக்கு பின் முரணாக சுஜாதா கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். அப்போது, ‘நான்தான் பிரேம் கன்வரை கொலை செய்தேன்’ என்று சுஜாதா ஒப்பு கொண்டார். எங்களது குடும்பத்தில் என்னை தவிர மற்ற 2 மருமகள்கள் மீதும் என் மாமியார் பிரேம் கன்வர் பாசம் காட்டுவார். என் மீது எப்போதும் கோபப்படுவார். இந்நிலையில் மூத்த மருமகள், தனியாக அவரது கணவருடன் சென்னைக்கு சென்று விட்டனர். அதற்கு பிறகும் எனக்கும் என் மாமியாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சில நேரத்தில் என்னை அடித்து துன்புறுத்துவார். நான் அனைத்தையும் பொறுத்து கொண்டேன். அவரது சித்ரவதை நாளுக்கு நாள் அதிகரித்தது. அதனால் அவரை பல முறை கொலை செய்ய திட்டமிட்டேன்.
வேறு வழியில்லாமல் பீகாரில் வசிக்கும் எனது மாமா மகன்கள் சுமித், தீபக் ஆகியோரிடம் தெரிவித்தேன். அப்போதுதான், பிரேம் கன்வரை கொலை செய்ய திட்டமிட்டோம். அதன்படி சுமித், தீபக் ஆகியோர் சென்னைக்கு வந்தனர். அவர்களை வேறு இடத்தில் தங்க வைத்தேன். பின்னர் திட்டமிட்டபடி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுமித், தீபக் ஆகியோரை வரவழைத்து பிரேம் கன்வரின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தோம். பின்னர் வீட்டின் மாடிக்கு சென்று தப்ப நினைத்தோம். அவர்கள், எங்களது வீட்டின் மாடியில் இருந்து பக்கத்து மாடிக்கு துள்ளி குதித்தனர். நான் குதிக்க முயன்றபோது தவறி விழுந்து விட்டேன். அதனால் காலில் அடிப்பட்டது. அதனால், கொலையை மறைப்பதற்காக, மர்ம நபர்கள் எனது மாமியாரை கொலை செய்து விட்டு என்னையும் அடித்து போட்டு விட்டு தப்பினார்கள் என்று நாடகமாடினேன். போலீசாரின் விசாரணையில் சிக்கி கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார். தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கல்வி
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion