Crime: தினந்தினம் தொல்லை தந்த மனைவி குடும்பம்.. மனமுடைந்த கணவர் தற்கொலை..! சென்னையில் சோகம்..
சென்னையை அடுத்த ஆவடியில் இன்ஜினீயர் ஒருவர் தனது மனைவி குடும்பத்தினர் அதிக நெருக்கடி கொடுத்ததாக கூறி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த ஆவடியில் இன்ஜினீயர் ஒருவர் தனது மனைவி குடும்பத்தினர் அதிக நெருக்கடி கொடுத்ததாக கூறி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி ஜே.பி. எஸ்டேட் முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் 33 வயதான அவினாஷ். இவர் சென்னையை அடுத்த சிறுசேரி பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் இன்ஜீனியராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு 29 வயதான பவித்ரா தேவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் குழந்தைகள் இல்லாமல் இருந்துள்ளது.
இவர்கள், சிறுசேரி பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக கடந்த 6 மாதத்துக்கு முன்பு அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவினாஷ் மீது பவித்ரா தேவி குடும்பத்தினர் புகார் கொடுத்தனர்.
தற்கொலை:
அதன்பேரில் காவல்துறையினர் அவினாஷை அழைத்து விசாரித்தனர். அதன்பிறகு பவித்ரா தேவி, கணவரை விட்டு பிரிந்து அயனாவரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டதாக அவினாஷ் ஆவடியில் அவரது வீட்டில் வசித்து வந்தார். மேலும் பூந்தமல்லி கோர்ட்டில் அவினாஷ், விவாகரத்து வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் அயனாவரம் அனைத்து மகளிர் காவல்துறையினர், அவினாஷை விசாரணைக்கு வரும்படி அழைத்து இருந்தனர். நேற்று முன்தினம் படுக்கை அறைக்கு தூங்க சென்ற அவினாஷ், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆவடி காவல்துறையினர், அவினாஷ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு அவினாஷ் எழுதி வைத்திருந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர்.
மனைவி குடும்பத்தால் தொல்லை:
அதில் அந்த கடிதத்தில் “எனது மனைவியின் குடும்பத்தினர் அதிக நெருக்கடி கொடுக்கிறார்கள். விவாகரத்துக்கு நான் மனு செய்து உள்ளேன். ஆனால் அடிக்கடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து என்னை விசாரணைக்கு வருமாறு அழைப்பதால் எனக்கு அதிக மனஉளைச்சல் ஏற்பட்டு உள்ளது. எனது சாவுக்கு என் மனைவி, மாமனார், மாமியார், மனைவியின் தங்கை மற்றும் அவர்களது குடும்ப நண்பர் ஆகியோர் தான் காரணம்” என எழுதி இருந்தார். இதையடுத்து, ஆவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடுமுழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 1,53,052 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்கொலைக்கான காரணங்கள் :
தொழில் சார்ந்த பிரச்சனைகள், வன்கொடுமை, மனநல பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், தனிமை உணர்வு, வன்முறை, போதை மருந்து , தீராத வலி, நிதி நெருக்கடி போன்றவைகள் இந்தியாவில் தற்கொலைகள் எண்ணிக்கைக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
மாநிலம் வாரியாக தற்கொலை விவரம் :
மகாராஷ்டிரா - 22,207 (13.5 சதவீதம்)
தமிழ்நாட்டு - 18,925 (11.5 சதவீதம்)
மத்தியப் பிரதேசம் - 14,965 (9.1 சதவீதம்)
மேற்கு வங்கம் - 13,500 (8.2 சதவீதம்)
கர்நாடகா - 13,056 (8 சதவீதம்)
அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மேற்கண்ட 5 மாநிலங்கள் டாப் 5 இடங்களை பிடித்துள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050