செங்கல்பட்டில் பயங்கரம்.. ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிப்பு.. கலெக்டர் சொல்வது என்ன?
Chengalpattu News: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த நபர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த திரிசூலம் வைத்தியர் தெருவைச் சேர்ந்தவர் பாபு (44). இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த நபருக்கும் இடையே இடத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
தற்கொலை முயற்சி
இந்தியாவில் நேற்று இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு வெடித்துள்ளது. அதில் பாபு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாபு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் அளிக்க வந்துள்ளார். அப்போது தன்னுடன் கையில் எடுத்து வந்த பெட்ரோலை தனது உடல் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
70% தீக்காயம்
இதில் பாபுவின் உடல் முழுவதும் தீக்காயம் பரவிய நிலையில் அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து 70 சதவீத தீக்காயங்களுடன் பாபுவிற்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பாபு உடல்நிலை கருத்தில் கொண்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் காத்திருந்து, ஆம்புலன்ஸ் மூலம் பாபுவை அனுப்பி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் விளக்கம் என்ன ?
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கூறுகையில், “செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை திரிசூலம் பகுதியை சேர்ந்த பாபு என்பவர் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்துள்ளோம். இதில் மருத்துவர், மருத்துவ உதவியாளர், காவலர் என நான்கு பேர் குழுவினரை ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்துள்ளோம் என தெரிவித்தார்.
தீவிர விசாரணைக்கு உத்தரவு
இது குறித்து தாம்பரம் மாநகர காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளோம், உடனடியாக போக்குவரத்து நெரிசல் இல்லாமல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் செல்ல அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபருக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளிடம் கூறி கூறிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளோம். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதலாக பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
Suicidal Trigger Warning :
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060).