ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் ஐடி ஊழியரை நண்பர்கள் கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது
மறைமலைநகரில் தனியார் ஐடி நிறுவன ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்டு ஏரியில் புதைக்கப்பட்ட சம்பவம், மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் வெறிச்செயல்.. உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு..
ஐடி ஊழியர் மாயம் - காணவில்லை என போஸ்டர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சீதக்காதி தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் கேட்டரிங் வேலை செய்து வருகிறார். (52), இவரது மகன் விக்னேஷ் (26) இவர் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் தனது மகன் கடந்த 11-ஆம் தேதி இரவு 11 மணிக்கு பிறகு காணாமல்போய் உள்ளார்.
எங்கு தேடியும் விக்னேஷ் வீடு திரும்பாத காரணத்தினால் விக்னேஷின் தந்தை தங்கராஜ் கடந்த 15-ஆம் தேதி மறைமலைநகர் காவல் நிலையத்தில் தனது மகனை கண்டுபிடித்து தரக்கோரி புகார் கொடுத்துள்ளார். மேலும், விக்னேஷ் புகைப்படத்துடன் மறைமலைநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பல இடங்களில் காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
மது அருந்தும் பொழுது தகராறு
இந்தநிலையில் மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதல் கட்ட விசாரணையில் விக்னேஷ் மறைமலைநகர் அருகே கோகுலாபுரம் ஏரியில் தனது நண்பர்கள் நான்கு பேருடன் மது அருந்தும்போது, நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் விக்னேஷை கத்தியால் வெட்டி கொலை செய்து உடலை ஏரியில் புதைத்தது தெரியவந்தது.
இதனையடுத்து விக்னேஷின் நண்பர்களான கோகுலாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த விசு (23), கீழக்கரணை பிள்ளையார் கோவில் பகுதியில் வசித்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தில்கோஷ் குமார் (24), மற்றும் கோகுலாபுரம் பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது.
பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
தொடர்ந்து தனிப்படை போலீசார் கோகுலபுரம் பகுதியில் பதுங்கி இருந்த மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் , இருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்து மறைமலைநகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை வழக்கில் கைதான குற்றவாளி விசு மீது செங்கல்பட்டு, விழுப்புரம், மாவட்டத்தில் கொலை முயற்சி, வழிப்பறி என ஐந்து வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோகுலாபுரம் பகுதியில் உள்ள ஏரியில் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் மூவரும் சேர்ந்து விக்னேஷை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு மூன்று அடி பள்ளம் தோண்டி புதைத்து விட்டதாக கைதான குற்றவாளிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
உடல்கூறு ஆய்வு
மேலும் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் முன்னிலையில் மருத்துவத்துறை அதிகாரிகள் விக்னேஷின் உடலை தோண்டி எடுத்து உடல்கூறு ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். நண்பர்களுக்கு இடையே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் விக்னேஷை கத்தியால், வெட்டிகொலை செய்து விட்டு பள்ளம் தோண்டி புதைத்த சம்பவம் மறைமலைநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடா நட்பு கேடாக முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது