திருவண்ணாமலை: வினாத்தாள் வெளியான விவகாரம்: தனியார் பள்ளி தாளாளர் உட்பட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு
திருவண்ணாமலையில் திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 2 தனியார் பள்ளிக்கு சம்மன் அளிக்கப்பட்டு தனியார் பள்ளி தாளாளர் உட்பட்ட 4 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10, மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்து. கொரோனா தொற்றால் தேர்வு குறித்த பயிற்சி இல்லாமல் இருந்த பள்ளி மாணவர்களுக்கு, அச்சத்தை போக்கும் வகையில் பொதுத்தேர்வுக்கு முன்னதாகவே திருப்புதல் தேர்வை அறிவித்தது பள்ளிக் கல்வித்துறை.
பிப்9-ம் தேதிமுதல் இந்த தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், குறிப்பிட்ட தேர்வுகள் நடைபெறுவதற்கு முன்தினமே கேள்வித்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளிக் கல்வித்துறை, வினாத்தாள்கள் கசிந்தது குறித்து விசாரணை மேற்கொண்டபோது திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் வந்தவாசி மற்றும் போளூர் பகுதிகளில் உள்ள இரு வெவ்வேறு தனியார் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வினாத்தாள்களே கசிந்திருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கல்வி மாவட்டங்களில், பள்ளிக் கல்வித்துறையின் இணை இயக்குநர் பொன்குமார் நேரடி விசாரணை மேற்கொண்டு இதை உறுதிசெய்தார். பின்னர், பள்ளிக் கல்வித்துறை ஆணையரிடம் அதற்கான அறிக்கையை அவர் அளித்தார்.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``இந்த இரண்டு பள்ளிகளில் இருந்தும் கேள்வித்தாள்கள் வெளியானது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணமான பள்ளியைச் சேர்ந்த நபர்களின் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்வுத்துறை இயக்குநர் அளித்த வழிகாட்டுதல்களை சரியாகப் பின்பற்றாத அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே வெளியிடப்பட்ட அட்டவணையின்படி திருப்புதல் தேர்வுகள் எந்த வித மாற்றமும் இன்றி தொடர்ந்து நடைபெறும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த பணியிடத்தில், விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாவிற்கு முழு கூடுதல் பொறுப்பு வழங்கி நியமித்துள்ளது பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
போளூர் மாவட்ட கல்வி அலுவலர் தயாளன் அரசு நகராட்சி, நிதியுதவி மெட்ரிக் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி 10, மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வில் (பிப் 14) தேதி அன்று மதியம் 2 மணியளவில் பிரிக்கப்பட வேண்டிய 12ம் வகுப்பு கணித பாடம் வினாத்தாள் முன்னதாக வெளியானது.
இதற்கு முன்னதாக (பிப் 11) அன்று மாலை 6 மணி அளவில் அஸ்வின் என்பவர் கணிதப்பாட வினாத்தாளை பிரித்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் (பிப் 14) அன்று நடைபெற இருந்த 10ம் வகுப்பு அறிவியல் கணித வினாத்தாளிலும் மற்றும் 12ம் வகுப்பு கணித வினாத்தாள்களும் சில பள்ளிகள் மூலம் தேர்வுகள் வினாத்தாள்கள் வாட்ஸ்அப் மூலம் வெளியிட்ட நபர்கள் யார் என்று கண்டுபிடித்து தரவேண்டும் என காவல்துறையிடம் போளூர் மாவட்ட கல்வி அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது போளூர் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் ஆக்ஸினியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ( Auxilium metric hr school ) நிர்மல் ரோஸ் ( தாளாளர் ), கிரேசி பாத்திமா (பிரின்ஸ்பல்) மற்றும் பிரசாத் (கணிதஆசிரியர் ), ஜெனிபர் அலுவலக உதவியாளர் ஆகிய 4 நபர்கள் மூலமாக வினாதாள் வெளியானது தெரியவந்தது. மேலும் போளூர் மாவட்ட கல்வி அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் 4 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். பின்னர் இவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, மேலும் இந்த செயலில் மற்றவர்களும் ஈடுபட்டுள்ளாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.