Crime: ஏ.டி.எம்.களில் கைவரிசை காட்டியது வடமாநில கொள்ளையர்களா..? விசாரணையை தீவிரப்படுத்தும் போலீசார்..!
திருவண்ணாமலையில் ஒரே இரவில் 4 இடங்களில் உள்ள ஏடிஎம் மிஷினில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக கருதப்படும் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இதனால் இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெளியூர் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மேலும் உள்ளூர் மக்களின் பயன்பாடு போன்ற செயல்களால் எப்போதும் திருவண்ணாமலை பரபரப்பாகவே இருக்கும். இதனிடையே இங்குள்ள மாரியம்மன் கோவில் 10வது தெருவில் ஸ்டேட் பாங்க் ஏடிஎம் இயங்கி வருகிறது.
கேஸ் வெல்டிங் மூலம் கொள்ளை
இந்த ஏடிஎம் மையத்திற்குள் நேற்று இரவு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்து ரூ.20 லட்சத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பியுள்ளனர். மேலும் கேஸ் வெல்டிங் பயன்படுத்தியதால் இயந்திரம் முற்றிலும் எரிந்து சேதமாகியுள்ளது. சம்பவம் குறித்து தகவலறிந்து ஏடிஎம் மையத்திற்கு வந்த திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு போலீசார் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என தீவிர விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் தண்டராம்பட்டு சாலையில் உள்ள ஏடிஎம் ஒன்றில் மர்மநபர்கள் புகுந்து மிஷினில் இருந்த ரூ.33 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இருந்த ஏடிஎம் மையத்தில் புகுந்த மர்ம நபர்கள் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்ஐ உடைத்து அதில் இருந்த லட்சக்கணக்கான ரூபாயை திருடி சென்றுள்ளனர்.
4 ஏடிஎம்மில் கொள்ளை
இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஏடிஎம் மையத்திலும் மர்ம நபர்கள் புகுந்து கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்ஐ உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அடுத்தடுத்து 4 இடங்களில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தில் ரூ.56 லட்சம் பணம் கொள்ளை போயுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நேரடியாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே இரவில் 4 ஏடிஎம் மையத்தில் நேரங்களில் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்ஐ உடைத்து லட்சக்கணக்கான ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனிப்படை அமைப்பு
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தின் 8 மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் ஆறு தனிப்பிரிவு காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணை
இந்த சம்பவம் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், கொள்ளையடித்த நபர்கள் வடமாநிலத்தை சேர்ந்த 2 பிரிவினர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வேலூர் வழியாக ஆந்திரா மாநிலம் செல்லும் வழியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் கர்நாடக மாநிலம் செல்லும் வழியில் உள்ள செங்கம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை காவல்துறையினர் கைப்பற்றி தீவர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தின் 9 மாவட்ட எல்லைகளில் காவல்துறையினர் தடுப்பு வேலி அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும். டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் ஆறு தனிப்பிரிவு காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.