Arumabakkam Bank Robbery case: மனைவியை கைகாட்டிய போலீஸ்! அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் அடுத்தடுத்து ட்விஸ்ட்!! தீவிர விசாரணை!
அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் தொடர்புடைய அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரும்பாக்கம் வங்கிக்கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அம்ல்ராஜுக்கு தொடர்பு இருப்பது முன்னதாகத் தெரிய வந்தது. காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குற்றவாளியான சந்தோஷ் தன்னிடம் இருந்த 3.5 கிலோ தங்க நகைகளை உறவினரான அமல்ராஜ் இல்லத்தில் வைத்திருப்பதாக கூறினார். அமல்ராஜ் அச்சிறுப்பாக்கம் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை பிடித்து தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினார். அதில் அமல்ராஜ், “எனக்கும் இந்த நகை கொள்ளைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. சந்தோஷின் மனைவியும் என்னுடைய மனைவியும் உறவினர்கள். ஆகவே அவருடைய மனைவி என் மனைவியிடம் நகைகளை கொடுத்து மறைத்து வைக்க கூறியுள்ளார். இது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது” எனக் கூறியுள்ளார்.
எனினும் இவருடைய வீட்டில் தங்க நகைககள் எப்படி வந்தது தெளிவாக தெரியவில்லை. இதன்காரணமாக இன்ஸ்பெக்டர் அமல்ராஜின் மனைவி மற்றும் குற்றவாளி சந்தோஷின் மனைவி ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த விசாரணையில் தான் உண்மை தெளிவாக தெரியவரும் என்று கருதப்படுகிறது.
நடந்தது என்ன?
சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள ஃபெடரல் வங்கியின் தங்க நகைக்கடன் வழங்கும் கிளையான ஃபேட் பேங்க கோல்டு லோன்ஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியல்தான் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு, காவலாளி, ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு தங்க நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றதாக கூறப்பட்டது.
பட்டப்பகலில் 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் முகமூடி அணிந்து வந்து கொள்ளையில் ஈடுபட்டதாக தகவல் வெளியான நிலையில், அந்த வங்கியின் ஊழியரான முருகன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் முக்கிய குற்றவாளி முருகன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து இருந்தனர்.
கோவையில் மற்றொரு குற்றவாளியான சூர்யா பதங்கியிருந்ததாக தகவல் கிடைத்தது. இதன்காரணமாக தனிப்படை காவல்துறையினர் கோவைக்கு விரைந்தனர். அங்கு அவர்கள் சூர்யாவை மடக்கி பிடித்தனர். அரும்பாக்கம் வங்கி கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்போது வரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக ஃபேட் பேங்க கோல்டு லோன்ஸ் வங்கியில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கத்தியை காட்டி மிரட்டி மயக்க மருந்தை முகத்தில் அடித்து கொள்ளையில் ஈடுபட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்கவும் கொள்ளையர்களைப் பிடிக்கவும் போலீசார் தரப்பில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு, கொள்ளையில் ஈடுபட்டதாக பாலாஜி என்பவரை போலீசார் கைது செய்தது. ஏற்கனவே சந்தோஷ், சக்திவேல் என மொத்தம் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான முருகனும் கைது செய்யப்பட்டிருந்தார்.