Crime: குழந்தைக்கு அப்பா யாரு? கர்ப்பிணியை நடுரோட்டில் குத்திக் கொன்ற காதலன், பழிவாங்கிய கணவன்
Delhi Affair Crime: கணவனுக்கு துரோகம் இழைத்த பெண்ணின் திருமணத்தை மீறிய உறவு, 3 மரணங்களுக்கு வழிவகுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Delhi Affair Crime: தகாத உறவு விவகாரத்தில் மனைவியை குத்திக் கொன்ற நபரை, கணவன் கொலை செய்த சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
தகாத உறவால் 3 மரணங்கள்
மத்திய டெல்லியில் திருமணத்தை மீறிய உறவு தொடர்பான தகராறில் கருவில் இருந்த சிசு உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ராம் நகர் பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் கர்ப்பிணிப் பெண்ணை அவரது காதலன் குத்திக் கொன்றதன் விளைவாக அரங்கேறியது. இல்லத்தரசியான ஷாலினி (22 வயது) இரண்டு மகள்களின் தாய் ஆவார். அவரது கணவரான ஆகாஷ் (23 வயது), ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இதனிடையே, ஷாலினி, ஆஷு என்கிற ஷைலேந்திரா (34 வயது) தகாத உறவில் இருந்ததே, இந்த ஒட்டுமொத்த சம்பவத்தின் மையப்புள்ளியாக இருந்துள்ளது.
நடந்தது என்ன?
ஆஷுவின் கருவை சுமந்து கொண்டிப்பதாக கூறப்பட்ட ஷாலினி, தனது கணவனுடனே தொடர்ந்து சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே பதற்றமான சூழல் இருந்துள்ளது. இந்த நிலையில் தான், நேற்று இரவு குதுப் சாலையில் தங்கியுள்ள தனது தாயாரை, மனைவியுடன் சேர்ந்து சென்று ஆகாஷ் சந்தித்து வீடு திரும்ப முற்பட்டுள்ளார். அப்போது அவர்களை வழிமறித்த ஆஷு ஆகாஷை கத்தியால் தாக்கினார். ஆனால் அவர் அதனை தடுத்துள்ளார். அதேநேரம், ஷாலினி ஆட்டோவில் இருந்ததை கண்ட ஆஷு, ஓடிச் சென்று அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதனை கண்டதும் தனது மனைவியைக் காப்பாற்ற முயன்ற ஆகாஷுக்கும் கத்திக் குத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விடாமல் முயன்ற அவர் கத்தியை பறித்து, அதனை கொண்டே ஆஷுவை குத்திக் கொன்றுள்ளார்.
தாய் சேய் மரணம்:
இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஷாலினியின் சகோதரர் ரோஹித், உடனடியாக அவளையும் அவரது கணவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அதே நேரத்தில் போலீசார் ஆஷுவை அதே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில், ஷாலினியும் ஆஷுவும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. தனது மனைவியைக் காப்பாற்றும் போது ஆகாஷுக்கு பல கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைக்கு தந்தை யார்?
ஷாலினியின் தாயார் ஷீலா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. குடும்பத்தினர் அளித்த பேட்டியில், “சில வருடங்களுக்கு முன்பு ஷாலினிக்கும் ஆகாஷுக்கும் இடையேயான உறவு விரிசல் அடைந்துள்ளது. அப்போது ஆஷுவுடன் காதல் ஏற்பட்டு, ஷாலினி சிறிது காலம் அவருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். பின்னர் ஷாலினியும் ஆகாஷும் சமரசம் செய்து கொண்டு தங்கள் இரண்டு குழந்தைகளுடன் ஒன்றாக வாழத் தொடங்கினர். இந்த சூழலில் ஷாலினி கருவுற அவர் சுமப்பது எனது குழந்தை என ஆஷு பிரச்னையில் ஈடுபட்டுள்ளார். ஆனால், ஆகாஷ் தான் எனது கருவிலிருக்கும் குழந்தைக்கு தந்தை என்று ஷாலினி திட்டவட்டமாக தெரிவித்தார். இதுவே இந்த கொடூர சம்பவத்திற்கு காரணம்” என விளக்கமளித்துள்ளனர்.





















