Rajendra Balaji Granted Bail | ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமின்; உச்சநீதிமன்றம் உத்தரவு.. நிபந்தனைகள் என்னென்ன?
மேலும் அவரது பாஸ்போர்டை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது. விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவும் உத்தரவிடப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திரபாலாஜி. ஆவினில் வேலை வாங்கிக் தருவதாக கூறி ரூ.3 கோடி பண மோசடி செய்ததாக, விருதுநகர் குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. அந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில், 20 நாட்களாக தலை மறைவாக இருந்த அவர், கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட அவர், விருதுநகரில் விசாரணை செய்யப்பட்டு, ஸ்ரீவில்லிப்புத்ததூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் வைத்த நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக தனக்கு முன்ஜாமின் கேட்டு ராஜேந்திர பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு, அது தள்ளுபடி ஆனதால், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அது விசாரணையில் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். இன்று அவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், அவருக்கு 4 வாரத்திற்கு இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதி உத்தவிட்டார். மேலும் அவரது பாஸ்போர்டை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது. விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவும் உத்தரவிடப்பட்டது. ராஜேந்திரபாலாஜியின் கைதுக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
1.ராஜேந்திரபாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்
2.வெளியூர், வெளிநாடு செல்லக்கூடாது
3.போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்
என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை அந்த உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கு தொடர்பான முந்தைய விபரங்கள்:
வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து அவரை கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கையில் இறங்கினர். ஆனால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகிவிட்டார். தொடர்ந்து 20 நாள்களாக தேடப்பட்டு வந்த ராஜேந்திர பாலாஜி கர்நாடகாவில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரை வரும் 20ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சிறையில் தனக்கு A க்ளாஸ் வசதி மட்டும் வேண்டுமென்று அவர் நீதிபதியிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அதனை உயர் நீதிமன்றம் நிகாரித்தது.
தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தபோது, “ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை இன்று விசாரிக்க இருந்தோம். அதற்குள் அவர் ஏன் இவ்வளவு அவசரமாக கைது செய்யப்பட வேண்டும். அவருக்கு தொடர்புடைய வழக்கறிஞர்களை எல்லாம் ஏன் தொந்தரவு செய்தீர்கள். இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த தமிழ்நாடு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், “இது அரசியல் உள்நோக்கத்துடன் பதியப்பட்ட வழக்கு இல்லை. அவர் மீது ஏராளமான புகார்கள் வந்தன. அதன் காரணமாகத்தான் அவரை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது” என்றார்.
இப்படி ஒருவர் மீது குற்றச்சாட்டு வருகிறதென்றால் அதனை இல்லை என்று நிரூபிக்க அவருக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பான ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென கூறி வழக்கு விசாரணையை ஜனவரி 10-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

