Aarudhra Case: டிசம்பர் 10ம் தேதி நாடு திரும்பும் ஆர். கே.சுரேஷ்! சூடுபிடிக்கும் ஆருத்ரா மோசடி வழக்கு!
ஆருத்ரா மோசடியில் தொடர்பிருப்பதாக கருதப்படும் நடிகரும், பாஜக ஓபிசி பிரிவு துணை தலைவருமான ஆர்.கே.சுரேஷ் ஆஜராக, பொருளாதார குற்றப்பிரிவினர் சம்மன் அனுப்பினர்.
ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதும் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மோசடி நிதி நிறுவன நிர்வாகிகள், முகவர்கள் உட்பட 45 பேரைக் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
இதில் ஆருத்ரா என்ற நிதி நிறுவனம் மட்டும் 1,09,285 முதலீட்டாளர்களிடமிருந்து 2,438 கோடி ரூபாய் மோசடி செய்தது என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியது. புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு தொடர்பாக மாலதி, மைக்கேல் ராஜ், ஹரிஷ், ராஜ செந்தாமரை, சந்திர கண்ணன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிக்கிய ஆர்.கே. சுரேஷ்
ஆருத்ரா வழக்கில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ரூசோ என்ற நடிகர் கைது செய்யப்பட்டார். இவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் ஆர். கே. சுரேஷ் பற்றி பல தகவல்களை கொடுத்திருந்தார். நடிகர் ஆர்.கே. சுரேஷ் தனது செல்வாக்கை பயன்படுத்தி இந்த வழக்கில் சிக்கிய முக்கிய குற்றவாளிகளை தான் காப்பாற்றுவதாக கூறி சுமார் ரூபாய் 12.50 கோடி வாங்கியதாக ரூசோ வாக்குமூலம் அளித்திருந்தார்.
தலைமறைவான நடிகர் ஆர். கே. சுரேஷ்
நடிகர் ரூசோவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தமிழ்நாடு பா.ஜ.கவின் ஓ.பி.சி. பிரிவு துணை தலைவராக இருக்கும் ஆர்.கே. சுரேஷுக்கும், பா.ஜ.கவின் நிர்வாகி ஹரீஷ் ஆகியோருக்கும் தொடர்பிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆருத்ராவை தொடர்ந்து 'எல்பின்' நிதி நிறுவன நிறுவனருக்கும் நடிகர் ஆர்.கே சுரேஷ் உதவி செய்தது கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 10 மாத காலமாக வெளிநாட்டில் தலைமுறைவாக இருக்கும் ஆர்.கே சுரேஷை பிடிப்பதற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
டிசம்பர் 10-ல் நாடு திரும்பும் ஆர்.கே. சுரேஷ்:
ஆருத்ரா மோசடியில் தொடர்பிருப்பதாக கருதப்படும் நடிகரும் பாஜக ஓபிசி பிரிவு துணை தலைவருமான ஆர்.கே.சுரேஷ் ஆஜராக, பொருளாதார குற்றப்பிரிவினர் சம்மன் அனுப்பினர். சம்மனை ரத்து செய்யக்கோரி ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மேலும் தனக்கு பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை திரும்ப பெறுமாறு உத்தரவிடக்கோரியும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில், ஆருத்ரா மோசடிக்கும் எனக்கும் தொடர்பில்லை. எனது மனைவி மற்றும் குழந்தையை கவனித்து கொள்வதற்காக தற்போது துபாயில் உள்ள நிலையில் நாடு திரும்பினால் கைது செய்யும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை திரும்ப பெற உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர். கே.சுரேஷ் வழக்கறிஞர் எஸ்.வீரராகவன் ஆஜராகி, வரும் டிசம்பர் மாதம் பத்தாம் தேதி ஆர்.கே.சுரேஷ் நாடு திரும்ப உள்ளார். இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தயாராக உள்ளோம் என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வரும் 8ம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.