Crime: கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த பெண் கார் ஏற்றி கொலை - இருவர் தப்பியோட்டம்
செய்யாறு அருகே கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த பெண்ணை கார் ஏற்றி கொலை. இதுகுறித்து கணவர் அளித்த புகாரின் பேரில் தப்பி ஓடியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் வெங்கட்ராயன்பேட்டை சேட் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் வயது (45), இவர் நெசவு தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி வயது (39) இவர் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் செய்யாறு கிடங்கு தெருவை சேர்ந்த பிரபு, கொடநகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்ற மாரி ஆகியோர் அதே பகுதியில் சேர்ந்து பார் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விஜயலட்சுமி தனியாக மது விற்பனை செய்து வருவதால், மது பிரியர்கள் அனைவரும் அவரிடம் சென்றனர். பிரபு, வெங்கடேசன் நடத்தும் மது பாருக்கு யாரும் வருவதில்லை. இதனால் இவர்களுக்கு விற்பனை குறைந்துள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து விஜயலட்சுமியிடம் மது விற்பனையை மற்ற இடத்தில் செய்ய கூறி தகராறு செய்துள்ளனர். இதையடுத்து, விஜயலட்சுமி செய்யாறு நகர் பகுதியை தள்ளி விற்பனை செய்து உள்ளார். இதனை அறிந்த மது பிரியர்கள் மீண்டும் விஜயலட்சுமியிடம் சென்று மது பாட்டில் வாங்கியுள்ளனர். இதனால் மீண்டும் பிரபு, வெங்கடேசன் ஆகியோரின் பாருக்கு யாரும் வராததால் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து மீண்டும் விஜயலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இந்த தகராறு கைகலப்பாக மாறியது. அதனைத்தொடர்ந்து விஜயலட்சுமி மது விற்பனை செய்யும் வரையில் பாருக்கு யாரும் வரமாட்டார்கள் என்பதனை அறிந்த இருவரும் சேர்ந்து விஜயலட்சுமியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் காலை 7 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் விஜயலட்சுமி செய்யாறு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் விஜயலட்சுமி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதனிடையே இருச்சக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை நேரில் பார்த்தவர் துரத்திச் சென்றனர். வைத்தியர் தெருவில் அந்த காரை அவர்கள் மடக்கினர். அப்போது காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி தப்பி ஓடினர். தகவலறிந்த செய்யாறு காவல்துறையினர் அந்த காரை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் விஜயலட்சுமியின் கணவர் முருகன் செய்யாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், ''எங்களுக்கும், செய்யாறு கிடங்கு தெருவை சேர்ந்த பிரபு, கொடநகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்ற மாரி ஆகியோருக்கும் இடையே மது விற்பனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 25-ந்தேதி அன்று விஜயலட்சுமியிடம் பிரபு மற்றும் மாரி ஆகியோர் தகராறு செய்தனர். அப்போது பிரபு என்றைக்காவது உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிவிட்டு சென்றார். அவர்கள்தான் எனது மனைவி மீது காரை ஏற்றி கொலை செய்துள்ளனர்'' என தெரிவித்துள்ளார். செய்யாறு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மது விற்பனை படு ஜோராக நடைபெற்று வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.