பிறந்து 29 நாட்களான குழந்தையை உயிருடன் புதைத்த கொடூர தாய்... பின்னணி என்ன....?
புதுச்சேரி: புதுச்சேரியில் 29 நாட்களான குழந்தையை உயிருடன் புதைத்த கொடூர தாய்...கொடூரத்தின் பின்னணி என்ன....?
புதுச்சேரி: புதுச்சேரி எல்லைப் பகுதியான மனப்பட்டு பகுதியில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் மனைவி குழந்தையை உயிருடன் புதைத்ததை கண்டறிந்து தாய் சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி எல்லை பகுதியான மனப்பட்டு சுடுகாட்டில் குழந்தை ஒன்று அரைகுறையாக புதைக்கப்பட்டு அதன் கால் பகுதி மட்டும் தெரிவதாக கிருமாம்பாக்கம் போலீசார்க்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலை மீட்டனர். அப்போது அங்கு வந்த குழந்தையின் தாய் சடலமாக இருந்த குழந்தையை பார்த்து கதறி அழுதார்.
தொடர்ந்து போலீசார் உடலை பரிசோதனைகாக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக குழந்தையின் பெற்றோர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த நரிகுறவர்கள் இனத்தை சேர்ந்த குமரேசன் - சங்கீதா ஆகிய இரண்டு பேருமே இரண்டாம் திருமணம் செய்து கொண்டு புதுச்சேரி எல்லை பகுதியான மனப்பட்டில் தங்களின் மகன் உடன் சமீப காலமாக வசித்து வருவதாகவும் இவர்களுக்கு கடந்த 29 நாட்களுக்கு முன்னர் பவிரா என்கிற பெண் குழந்தை பிறந்ததாகவும் அதற்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்து, இறந்துவிட்டதால் யாருக்கும் தெரியாமல் புதைத்ததாக தெரிவித்துள்ளனர்.
சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, 29 நாட்களான குழந்தை புதைக்கப்பட்ட விவகாரத்தில் நேற்று இரவு கணவன் மனைவிக்குள் மது போதையில் ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவியிடம் குழந்தை யாருக்கு பிறந்தது என கேள்வி எழுப்பி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஆத்திரமடைந்த தாய் சங்கீதா குழந்தையை உயிருடன் புதைத்தது போலீசார் இறுதி கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது குழந்தையின் தாய் சங்கீதாவை கைது செய்துள்ள போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.