Caste Violence : கோயிலுக்குள் நுழைந்த பட்டியலின இளைஞர்.. கொள்ளிக்கட்டையால் தாக்கிய கொடூரம்..
உத்தரகாசியில் கோயிலுக்குள் நுழைந்ததற்காக 22 வயது பட்டியலின இளைஞரை ஆதிக்க பிரிவை சேர்ந்த கிராம மக்கள் எரியும் மரக்கட்டைகளால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாசி: உத்தரகாசியில் கோயிலுக்குள் நுழைந்ததற்காக 22 வயது பட்டியலின இளைஞரை சாதி இந்துப் பிரிவை சேர்ந்த கிராம மக்கள் எரியும் மரக் கட்டைகளால் கொடூரமாக தாக்கினர். காயமடைந்த ஆயுஷ், டேராடூனில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி 9 ஆம் தேதி மாலை உத்தரகாஷி மாவட்டத்தில் உள்ள மோரி தொகுதியில் உள்ள பைனோல் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது, ஜனவரி 11 அன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. ஜெய்வீர் சிங், பாக்யன் சிங், ஈஸ்வர் சிங் மற்றும் ஆஷிஷ் சிங் ஆகிய 5 பேர் மீது எஸ்சி/எஸ்டி சட்டம் மற்றும் ஐபிசியின் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, ஜனவரி 9 மாலை, பாதிக்கப்பட்ட இளைஞர் வழிபாட்டுத் தளத்திற்குள் நுழைந்த போது சில கிராம மக்களால் இரவு முழுவதும் கோவிலுக்குள் சிறைபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள், முதலில், அவரை துன்புருத்தியதாகவும், பின்னர் அவர் மயங்கி விழும் வரை எரியும் கட்டைகளால் அவர் தாக்கப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுநாள் காலை, ஆயுஷ் அங்கிருந்து தப்பிச் சென்றார். பின், அவரது வீட்டிற்கு வந்த குற்றவாளி, போலீசில் புகார் கொடுக்க முயன்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கிராம மக்களால் கூறப்படுகிறது.
பதற்றமான சூழல் நிலவி வருவதால் பைனோலில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.பி., அர்பன் யதுவன்ஷி, நேற்று தனியார் பத்திரிக்கையிடம் கூறுகையில்: "பட்டியலின இளைஞரை தாக்கியதற்காக ஐந்து கிராம மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றும், அப்பகுதியில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும்” கூறினார்.
இதேபோல கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ராஜஸ்தானில் பட்டியலின வகுப்பை சேர்ந்த ஒருவரை கொடூரமாக தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததை அடுத்து வெளிச்சத்துக்கு வந்தது.
ராஜஸ்தான் மாநிலம் சிரோஷி மாவட்டத்தை சேர்ந்தவர் 38 வயதான பாரத் குமார். இவர் பட்டியலின வகுப்பை சார்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் பாரத் குமார் அப்பகுதி முழுவதும் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாரத் குமார் வேலை பார்த்தபோது, அவரது வேலைக்கு ஊதியமாக ரூ. 21 ஆயிரம் கேட்டுள்ளார். ஆனால், அந்த நபர்கள் வெறும் ரூ 5 ஆயிரம் மட்டுமே கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாரத் குமார் மீதம் உள்ள தொகையை கேட்டபோது, தருகிறேன் என்று சொல்லி அந்த நபர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வைத்துள்ளனர். ஒரு கட்டம்வரை பொறுமையாக இருந்த பாரத் குமார், நீங்கள் பணத்தை தராவிட்டால் காவல்நிலையத்தில் புகார் அளிப்பதாக எச்சரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் ஒன்று சேர்ந்து பாரத் குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து அவர் கழுத்து மீது செருப்பு மாலை போட்டு சிறுநீர் குடிக்க வைத்து, அதை வீடியோவாகவும் பதிவிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.