திருவண்ணாமலை: செவிலியர் வீட்டில் 68 பவுன் நகை, பணம் கொள்ளை!
திருவண்ணாமலை அரசு மருத்துவமனை பெண் ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து 68 பவுன் தங்க நகை 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள அரசு மண் பரிசோதனை நிலையம் பின்புறம் உள்ள திருமலை நகர் முதல் தெருவை சேர்ந்தவர் நடேசன். இவருடைய மனைவி சுமதி வயது (50). இவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துணை செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ராஜேஷ், விவேக் என 2 மகன்கள் உள்ளனர். இதில் ராஜேஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர். விவேக் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சசிகா.
இந்த நிலையில் நேற்று முன்தினம் விவேக் வேலை காரணமாக சென்னைக்கு சென்று உள்ளார். அவரது மனைவி சசிகா அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டில் சுமதி, அவரது மூத்த மகன் ராஜேஷ் ஆகியோர் மட்டும் இருந்து உள்ளனர். இரவு பணி காரணமாக ராஜேஷை அவரது அறையில் தூங்க வைத்து விட்டு சுமதி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.
காலையில் சுமதி பணி முடிந்து வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சுமதி அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது ராஜேஷ் இருந்த அறை வெளிபக்கமாக தாழ்பாள் போடப்பட்டு இருந்தது. திறந்து பார்த்தபோது அங்கு ராஜேஷ் பத்திரமாக இருந்துள்ளார். பக்கத்து அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. அதில் இருந்த செயின், வைர நெக்லஸ் உள்பட சுமார் 68 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூபாய் 1லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்று விட்டனர். ராஜேசை அறையில் இருந்து வெளியே வந்துவிடாமல் இருக்க பத்திரமாக தாழ்பாள் போட்டு அடைத்து வைத்துவிட்டு மர்ம நபர்கள் தங்கள் கைவரிசையை நடத்தியுள்ளனர்.
இது குறித்து அவர் திருவண்ணாமலை தாலுகா காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, நகை- பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை நகரைச் சுற்றிலும் புதிய குடியிருப்புகளில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகின்றனர்.
குறிப்பாக அவலூர்பேட்டை ஈரோடு வள்ளலார் நகரில் ஒரு வீட்டில் 22 பவுன் தங்க நகை திருட்டு நடைபெற்றுள்ளது ஷாரோன் அடுத்த கரையான் செட்டி தெரு பகுதியில் அடுத்த இரண்டு வீடுகளில் 25 பவுன் நகை மற்றும் ரொக்கம் திருடு போனது தொடரும் திருட்டு சம்பவங்களால் வீடுகளை பூட்டிவிட்டு வெளியே செல்லும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது மட்டுமின்றி திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர் பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தாலும் கொள்ளையர்கள் கைவரிசை அதிகரித்து வருகிறது. ரோந்து பணியில் உள்ள காவல்துறையினர் தூங்குகிறார்களா என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.