துபாய் அரண்மனையில் மனநல ஆலோசகர் பணி - தஞ்சாவூர் பெண்ணிடம் 5.34 லட்சம் மோசடி
’’நீங்கள் அன்பானவர், பிறருக்கு உதவுபவர் என்பதை காட்டும் விதமாக தான தர்மம் செய்திருக்க வேண்டும் எனக்கூறி, வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு பணம் பறிப்பு’’
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் ரகேல் சுவர்ண சீலி (50). இவர் ஆங்கிலோ இந்திய பெண். இவர் ஐக்கிய அரபு அமீரக மன்னரும், பிரதமருமான முகமது பின் ரஷீத் அல் மக்தூம் பெயரில் இருந்த ட்விட்டர் கணக்கை பின் தொடர்ந்து வந்தார். முகமது பின் ரஷீத் அல் மக்தூம் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 6ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமராக இருந்து வருகிறார். உலகில் பெரும் பணக்கார அரசர்களில் நான்காவது இடத்தில் உள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு, அப்பெண்ணுக்கு துபாயின் இளவரசர் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் என்ற பெயரில் திடீரென ஒரு மெயில் வந்துள்ளது. அதில் நீங்கள் எனது தந்தையாரின் டிவிட்டர் கணக்கை நீங்கள் நீண்ட நாள்களாகப் பின்பற்றி வருவதும், தங்களை எங்களது அரண்மனையில் மன நல ஆலோசகர் பணியில் அமர்த்த இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும், அதற்கு ராயல் சிட்டிசன் ஷிப் சான்று பெற்றிருக்க வேண்டும். அதே போல் நீங்கள் அன்பானவர், பிறருக்கு உதவுபவர் என்பதை காட்டும் விதமாக தான தர்மம் செய்திருக்க வேண்டும் எனக்கூறி, வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு, பணம் அனுப்புமாறு கேட்டு கொண்டுள்ளார்.
அந்த மெயிலில் உள்ள தகவலை உண்மை என நம்பிய, ரகேல் சுவர்ண சீலி, கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 4 ந்தேதி அவ்வங்கி கணக்கிற்கு இரண்டு தவணையாக மொத்தம் 8,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 5.35.400) பணம் அனுப்பினார். அதன் பிறகு நீண்ட காலமாகியும் எந்த வித பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ரகேல் சுவர்ண சீலி தஞ்சாவூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
ஐக்கிய அரபு அமீரக பிரதமரின் பெயரில் போலியான டிவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதும், தஞ்சாவூரை சேர்ந்த ரகேல் சுவர்ண சீலி என்ற பெண்ணுக்கு, துபாய் இளவரசரின் பெயரில் போலியாக கூகுல் கணக்கில் மெயில் அனுப்பட்டுள்ளதும், இதே போல், ரகேல் சுவர்ண சீலி பணம் அனுப்பிய வங்கி கணக்கு ஜெர்மனியிலுள்ள ஒரு வங்கி கணக்காகும். ரகேல் சுவர்ண சீலி அனுப்பிய தொகை துபாயிக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து, மர்ம நபரை, பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.