Accident: தமிழ்நாட்டில் அதிகாலையிலேயே சோகம்.. இருவேறு விபத்துகளில் 3 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில் அதிகாலையில் இருவேறு இடங்களில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகாலையில் இருவேறு இடங்களில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தில் கல்லூரி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் சென்ற பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்தை சந்தித்துள்ளது. சாலையில் இருந்த வளைவு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விபத்தில் ஸ்வேதா என்ற மாணவி உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 10க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே மற்றொரு விபத்து நடைபெற்றுள்ளது. உளுந்தூர்பேட்டையில் கார் - தனியார் சொகுசு பேருந்து மோதியதில் காரில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முன்னால் சென்ற லாரி திடீரென வேகத்தை குறைத்த நிலையில் கார் - சொகுசுப்பேருந்து விபத்தில் சிக்கியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 30க்கு மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நடைபெறும் விபத்துகள் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இருவிபத்துகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட சரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி விபத்து - முதல்வர் நிதியுதவி
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே கொல்லம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புன்னையாபுரம் என்ற ஊர் உள்ளது. இந்த இடத்தில் நேற்று அதிகாலை காரும் - சிமெண்ட் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த கார்த்திக், வேல், மனோஜ், சுப்பிரமணியன், மனோகரன், போத்திராஜ் ஆகிய 6 பேர் உயிரிழந்தனர். குற்றாலத்தில் குளித்துவிட்டு ஊர் திரும்பிய 6 பேரும் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், தலா ரூ.2 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





















