பிரிந்து சென்ற மனைவி.. டாஸ்மாக் பாரில் உறவினர்களை வெட்டிக்கொன்ற கணவன்!
முருகனின் அக்காவான தங்கத்தாயை கோமு திருமணம் செய்துள்ளார். அதேபோல் முருகனின் தங்கை மாரியம்மாளை மந்திரம் திருமணம் செய்துள்ளார். மூன்று பேருமே மிக நெருங்கிய உறவினர்களாக இருந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குடும்பத் தகராறில் டாஸ்மாக் மதுபான பாரில் இரண்டு பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் பாரில் நடந்த சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள காப்புலிங்கம் பட்டியைச் சேர்ந்தவர் முருகன். அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினரான மந்திரம் என்பவருடன் இணைந்து தளவாய்புரம் பகுதியில் உள்ள மதுபான கூடம் ஒன்றில் மது அருந்தி கொண்டிருந்தனர். இந்த நிலையில் இவர்களது உறவினரான தளவாய்புரத்தைச் சேர்ந்த கோமு என்பவர் அங்கு சென்று முருகன் மற்றும் மந்திரத்திடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதாவது என்னுடைய மனைவி தங்கத்தாய் பிரிந்து சென்றதற்கு நீங்கள் இருவரும் தான் காரணம் எனக் கூறி அவர் சண்டையிட்டுள்ளார். இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் கோமு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முருகன் மற்றும் மந்திரத்தை வெட்டிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விட்டார். இதனைத் தொடர்ந்து மதுபானக் கூடத்தில் மது அருந்திய சிலர் இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு முருகனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மந்திரம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து கோமுவை தேடி வருகின்றனர்.
கொலை வழக்கின் பின்னணி
இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், “முருகனின் அக்காவான தங்கத்தாயை கோமு திருமணம் செய்துள்ளார். அதேபோல் முருகனின் தங்கை மாரியம்மாளை மந்திரம் திருமணம் செய்துள்ளார். மூன்று பேருமே மிக நெருங்கிய உறவினர்களாக இருந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள கோமு ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர்.
இந்த வழக்கில் விடுதலையான பிறகு விவசாயம் செய்து வந்துள்ளார். அதே சமயம் அடிக்கடி மது அருந்தும் பழக்கம் கொண்ட அவர், மனைவி தங்கத்தாய் மற்றும் மகன் மாடசாமியிடம் தகராறும் செய்து கொண்டள்ளார். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகன் மாடசாமியை கோமு கத்தியால் குத்த முயன்றார். இதனைத் தடுக்க முயன்ற மனைவியை தாக்கியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட தகராறில் தங்கத்தாய் மற்றும் மகன் மாடசாமி இருவரும் கோமுவை பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் வெளியூரில் வசித்து வரும் நிலையில் அவர்கள் பிரிந்து சென்றதற்கு காரணம் முருகன் மற்றும் மந்திரம் ஆகிய இருவர்தான் என கோமு கடும் கோபத்தில் இருந்துள்ளார். மேலும் தன்னுடைய மனைவி எங்கே இருக்கிறார் என அடிக்கடி கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் முருகன் மற்றும் மந்திரம் இருவரும் மதுபான பாரில் இருப்பதைக் கண்ட கோமு உள்ளே நுழைந்து என்னுடைய மனைவியை வாழ விடாமல் தடுத்துவிட்டு நீங்கள் இருவரும் மது குடித்து சந்தோஷமாக இருக்கிறீர்களா? எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை அரிவாளால் வெட்டி உள்ளார்” என்பது தெரிய வந்துள்ளது.





















