Crime: ஓடும் காரில் 17 வயது சிறுமி, 3 காமுகர்கள் கொடூரம் - போதையில் தூக்கி வீசப்பட்ட 19 வயது பெண் பலி
Crime: ஓடும் காரில் வைத்து 17 வயது சிறுமியை 3 பேர் பாலியல் வnகொடுமை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

UP Crime: மீரட்டில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல், மற்றொரு 19 வயது பெண்ணை காரில் இருந்து தூக்கி வீசி கொலை செய்துள்ளது.
மீரட்டில் கொடூரம்:
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஓடும் காரில் வைத்து 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவருடன் இருந்த 19 வயது பெண்ணை காரில் இருந்து கீழே தள்ளி, 3 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீரட் மற்றும் புலந்த்ஸர் பகுதிகளுக்கு இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலை 344ல் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நொய்டாவில் உள்ள ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சிறுமி, அந்த கும்பலால் கடத்தப்பட்டுள்ளார். மறுநாள் காலையில் அவர் தப்பித்து வந்து குர்ஜா நகர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
நடந்தது என்ன?
காவல்துறையில் அளித்துள்ள புகாரின்படி, ” கிரேட்டர் நொய்டாவின் சூரஜ்பூர் நகரைச் சேர்ந்த சந்தீப் சிங் மற்றும் அமித் குமார் ஆகிய இரண்டு இளைஞர்களுடன் பாதிக்கப்பட்ட அந்த பெண் மற்றும் அவரது 19 வயது தோழி, கடந்த செவ்வாயன்று இரவு காரில் பயணித்துள்ளார். அவர்களுடன் காசியாபாத் பகுதியில் இருந்து கவுரவ் குமார் என்ற மேலும் ஒரு நபரும் இணைந்துள்ளார். இந்த 5 பேரும் சேர்ந்து காரில் மது அருந்தியபடி, ஊரை சுற்றி வந்தனர். மீரட் வழியாக லக்னோ சென்றபோது, அவர்கள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மரணமும்.. கூட்டு பாலியல் வன்கொடுமை..
மீரட்டில் உள்ள ஜானி பகுதியை நெருங்கும்போது, வாகனத்தை நிறுத்தும்படி 19 வயது பெண் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அந்த பெண்ணை காரில் இருந்து வெளியே தள்ளியுள்ளனர். இதனால் கீழே விழுந்த பெண்ணின் மீது அவ்வழியாக வந்த ஒரு வாகனம் ஏறி இறங்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதேநேரம், காரில் இருந்த அந்த சிறுமியை மூன்று பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்” என சிறுமி தரப்பின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக BNS பிரிவுகள் 115(2) (தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 70(2) (கற்பழிப்பு), 351 (குற்றவியல் மிரட்டல்) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவுகள் 5/6 ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
என்கவுன்டர் நடத்திய போலீஸ்:
சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவாக இருந்த 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அதன்படி, புலந்த்ஸர் பகுதியில் மறைந்து இருந்தவர்கள் மீது போலீசார் நடத்திய என்கவுன்டரில், சந்தீப் மற்றும் கவுரவ் ஆகிய இருவரும் குண்டடிபட்டனர். சிகிச்சைக்குப் பிறகு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், மீரட் மற்றும் குர்ஜா பகுதி மக்கள் 334வது தேசிய நெடுஞ்சாலையில், போலீசார் முறையாக ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதேமாதிரி கடந்த 2016ம் ஆண்டு அந்த தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஒரு காரை மறித்து, தாய் மற்றும் அவரது பதின்பருவ மகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியில் இந்த வழக்கு சிபிஐ வசம் சென்ற பிறகு, பல காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.





















