LIC Jeevan Umang Policy: நாள்தோறும் ரூ.45 சேமிப்பு.. ஓய்வின் போது மாதம் ரூ. 36 ஆயிரம் தரும் எல்.ஐ.சி திட்டம்!
எல்.ஐ.சி நிறுவனம் வழங்கும் `ஜீவன் உமாங்’ காப்பீட்டுத் திட்டம் உங்கள் குடும்பத்தினருக்கு வருமானத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறது.
காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் இந்தியர்களின் நினைவில் முதலில் வருவது எல்.ஐ.சி நிறுவனத்தின் காப்பீட்டுத் திட்டங்கள் தான்.. இதன் காரணமாகவே, எல்.ஐ.சி நிறுவனம் பலதரப்பட்ட மக்களுக்குத் தேவையான சிறப்பு உத்திகளைக் கையாண்டு வருகிறது. அரசு நிறுவனமான எல்.ஐ.சி வெவ்வேறு வயதினரையும், வெவ்வேறு பின்னணி கொண்ட மக்களுக்காகவும் பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறது. எந்தப் பிரச்சினையும் இல்லாமல் முதலீடு செய்ய விரும்பும் இந்தியர்களுக்கு எல்.ஐ.சி நிறுவனம் முதல் தேர்வாக அமைகிறது. வங்கி சேமிப்புக் கணக்குகள், அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்குகள் முதலானவற்றிற்கு அடுத்தபடியாக அதிக லாபம் ஈர்க்கும் திட்டமாக எல்.ஐ.சி வழங்கும் காப்பீட்டுத் திட்டங்கள் இருக்கின்றன.
எல்.ஐ.சி நிறுவனம் வழங்கும் `ஜீவன் உமாங்’ காப்பீட்டுத் திட்டம் உங்கள் குடும்பத்தினருக்கு வருமானத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறது. இந்தத் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கூடுதல் பலன்களையும், ப்ரீமியம் செலுத்தும் நேரம் முடிவடையும் போது ஒரே நேரத்தில் பெரியளவிலான தொகை கையில் கிடைக்கிறது. மேலும், பங்குதாரரின் முழு வாழ்க்கைக்கும் இது உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.
உங்கள் 26வது வயதில் எல்.ஐ.சி ஜீவன் உமாங் திட்டத்தில் இணைந்து, 4.5 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்தால், சராசரியாக ஒவ்வொரு மாதமும் 1350 ரூபாய் அல்லது நாள்தோறும் 45 ரூபாய் என்ற விகிதத்தில் பணம் செலுத்த வேண்டும். இதன்மூலமாக, ஆண்டுக்கு சுமார் 15,882 ரூபாய் சேமிக்கப்படுகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு, இதே தொகை தொடர்ந்து செலுத்தப்பட்டு சுமார் 4.76 லட்சம் ரூபாய் என்ற அளவில் கிடைக்கிறது.
30 ஆண்டுகள் தொடர்ந்து இதே ப்ரீமியம் செலுத்தப்படு வரும் போது, அடுத்த 31ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் எல்.ஐ.சி நிறுவனம் சுமார் 36 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்துகிறது. இதன்மூலமாக நீங்கள் உங்கள் 100 வயதை எட்டும் போது, மொத்தமாக 36 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற முடியும்.
இந்தத் திட்டத்தின் பலன்கள் என்ன?
வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது. எல்.ஐ.சி ஜீவன் உமாங் திட்டத்தின் குறைந்தபட்ச உறுதிசெய்யப்பட்ட தொகை 2 லட்சம் ரூபாய் ஆகும்.. 100 வயதை எட்டுவதற்கு முன்பு, இதில் முதலீடு செய்பவர் உயிரிழக்கும் சூழலில், அவரால் பரிந்துரைக்கப்பட்டவருக்கு முதலீட்டுத் தொகை மொத்தமாகவோ, தவணை முறையிலோ அளிக்கப்படும். முதலீடு செய்பவர் 100 வயது வரை உயிர் வாழும் போது, ஒவ்வொரு ஆண்டுக்கும் சேர்த்து முதலீட்டின் 8 சதவிகிதம் கூடுதல் பலனாக வழங்கப்படும். எல்.ஐ.சி ஜீவன் உமாங் திட்டத்தின் கால அளவு 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள், 30 ஆண்டுகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.