ITR Filing: ஜுலை 31 கடைசி, வருமான வரி தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ..!
ITR Filing: கடந்த நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும் ஜுலை மாதம் 31ம் தேதி நிறைவடைய உள்ளது.
ITR Filing: கடந்த நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
வருமான வரி கணக்கு:
கணக்கு தணிக்கை (AUDITED) செய்யப்படாத வரி செலுத்துவோருக்கு, வருமான வரி அறிக்கையை (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு (ஐடிஆர் கடைசி தேதி) ஜூலை 31 ஆகும். வருமான வரித்துறையின் இணையதளத்தின்படி, ஜூன் 29 ம் தேதி வரையில் ஒரு கோடியே 3 லட்சத்து 92 ஆயிரத்து 552 பேர் 2023-24 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் 1 கோடியே 29 லட்சத்து 5 ஆயிரத்து 361 வருமானங்கள் சரிபார்க்கப்பட்டன மற்றும் 39 லட்சத்து 37 ஆயிரத்து 293 பேரின் விவரங்கள் மீதான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு வரி செலுத்துபவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது மிகுந்த கவனத்துடன் இருந்தாலும், சில எதிர்பாராத தவறுகள் நிகழ்வது என்பது தவிக்கமுடியாததாக உள்ளன. தவறான வங்கிக் கணக்கு எண்ணைக் குறிப்பிடுவது, வட்டி வருமானத்தை அறிவிக்க மறப்பது அல்லது தவறான விலக்கு கோருவது போன்ற தவறுகள் அதிகம் காணப்படுகின்றன. ஐடிஆரில் நீங்கள் ஏதேனும் தகவலை தவறாக உள்ளிட்டிருந்தால், நீங்கள் பீதி அடையத் தேவையில்லை. நீங்கள் அதை எளிதாக சரிசெய்யலாம்.
தவறுகள் தொடர்பான திருத்தம்:
வருமான வரிச் சட்டம், 1961, பிரிவு 139(5) இன் படி, வருமான வரி செலுத்துபவர் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்த பிறகு தவறு செய்ததாகவோ அல்லது தவறான தகவலைக் கொடுத்ததாகவோ உணர்ந்தால், அவர் தனது தவறைத் திருத்திக்கொள்ளலாம். திருத்தப்பட்ட ITR ஐ தாக்கல் செய்வதன் மூலம் இதைச் செய்யலாம். எனவே, ஐடிஆர் தாக்கல் செய்யும் போது நீங்கள் தவறு செய்திருந்தால், உடனடியாக திருத்தப்பட்ட ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும். ரிட்டன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிவடைவதற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் ரிட்டர்னைத் திருத்திக் கொள்ளலாம் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.
சரிபார்ப்பு அவசியம்
நீங்கள் ஐடிஆரை திருத்துகிறீர்கள் என்றால், அதை நீங்கள் கவனமாக சரிபார்க்க (VERIFY) வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் திருத்தப்பட்ட ITR ஐ சரிபார்க்கவில்லை என்றால், வருமான வரித்துறை அதை ஏற்காது மற்றும் உங்கள் திருத்தப்பட்ட ITR செல்லாது.
ஆன்லைனில் திருத்தங்களை செய்வது எப்படி?
- வருமான வரித் துறையின் https://www.incometax.gov.in/iec/foportal என்ற இணையதள முகவரியை அணுகவும்
- ஈ-ஃபைல் மெனுவிற்குச் சென்று, திருத்தும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- அங்கு 'ஆர்டர்/அறிவிப்பு திருத்தப்பட வேண்டும்' மற்றும் கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து மதிப்பீட்டு ஆண்டைத் தேர்ந்தெடுக்கவும். இதற்குப் பிறகு, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து கோரிக்கை வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
- வரிக் கடன் பொருந்தாத திருத்தம் மட்டும் அல்லது ரிட்டர்ன் டேட்டா கரெக்ஷன் போன்றவற்றில் இருந்து உங்களுக்குப் பொருந்தும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
- தகவலைப் புதுப்பித்த பிறகு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஒரு வெற்றிச் செய்தி தோன்றும், மேலும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடியில் அது தொடர்பான மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.
- ஆன்லைனில் நிலையை சரிபார்க்கவும்
உங்கள் ஐடிஆரில் உள்ள தவறை சரிசெய்ய நீங்கள் செய்த திருத்தம் அங்கீகரிக்கப்பட்டதா இல்லையா என்ற தகவலையும் பெறலாம். இதற்கு, நீங்கள் வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.incometax.gov.in/iec/foportal/ க்குச் செல்ல வேண்டும். பின்னர் My Account மெனுவிற்கு சென்று 'View e-Filed Returns/Forms' என்பதைக் கிளிக் செய்யவும். இங்கே கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து திருத்தும் நிலையைத் தேர்ந்தெடுத்து சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும். தேடல் தொடர்பான பதில்கள் உங்களுக்கு கிடைக்கும்.