Facebook | சிறு தொழில்களுக்கு புதிய கடன் திட்டத்தை அறிவித்த ஃபேஸ்புக் - விவரம்!
ஃபேஸ்புக் நிறுவனமும் இண்டிஃபை நிறுவனமும் இணைந்து புதிய கடன் திட்டம் ஒன்றை தொடங்க உள்ளது.
கொரோனா பெருந்தோற்று காரணமாக இந்தியாவில் பல்வேறு சிறு குறு தொழில்கள் மிகவும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த தொழில்களில் ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்தி தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு தற்போது ஒரு புதிய வழி கிடைத்துள்ளது. அதாவது ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆன்லைன் கடன் தரும் நிறுவனமான இன்டிஃபை உடன் இணைந்து புதிய கடன் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்தப் புதிய திட்டத்தின்படி சிறுகுறு தொழில் செய்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை கடனாக அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடனை பெற இந்த தொழில் நிறுவனங்களை ஃபேஸ்புக் தளத்தில் தங்களது விளம்பரங்களை செய்து இருக்க வேண்டும். அத்துடன் குறைந்து 6 மாதங்களுக்கு மேலாக இந்த நிறுவனங்கள் ஃபேஸ்புக் தளத்தில் பயனாளராக விளம்பரங்கள் உள்ளிட்டவற்றை செய்து இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் மூலம் கடன் பெறுவர்களுக்கு ஆண்டிற்கு வட்டி 17-20 சதவிகிதமாக வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தொழில்நிறுவனங்களில் பெண்கள் உரிமையாளராக இருந்தால் இந்த வட்டி சதவிகிதம் சுமார் 0.5 சதவிகிதம் வரை குறையும் என்று கூறப்படுகிறது. இந்தப் புதிய திட்டத்தால் நிறையே சிறு குறு தொழில்கள் பயன் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்திய அதிகாரி அஜித் மோகன், “இந்த கடன் திட்டம் மூலம் ஃபேஸ்புக் நிறுவனம் எந்தவித வருமானத்தையும் ஈட்ட விரும்பவில்லை. மிகவும் பாதிப்பு அடைந்த தொழில்களுக்கு உதவவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் எந்தவித சொத்துகளுக்கும் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் யார் யார் கடன் பெறலாம் என்பதை இண்டிஃபை நிறுவனம் முடிவு செய்யும். அதற்கு எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.அவர்கள் உரிய ஆவணங்களை ஆய்வு செய்து இந்த முடிவை எடுப்பார்கள். அவர்களின் ஆய்விற்கு பிறகு 5 நாட்களுக்குள் கடன் தொகை அளிக்கப்படும். இந்தியாவில் தான் இந்தத் திட்டத்தை முதல் முறையாக தொடங்கியுள்ளோம்” எனக் கூறினார்.
முன்னதாக கொரோனா பாதிப்பு காலத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் பல முன்னெடுப்புகளை எடுத்து வந்தது. அந்த வரிசையில் இந்த கடன் திட்டமும் இணைய உள்ளது. இந்தத் திட்டத்திற்கு உரிய ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் தொடங்கப்படும் என்று அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் கேட்டு வங்கிக்கு அழையும் தொழிலாளர்களுக்கு இந்தத் திட்டம் நல்ல பயனாக அமையும் என்று கருதப்படுகிறது.
மேலும் படிக்க:ட்ரோனில் பறக்கும் மருந்துகள்.. கெத்து காட்டிய பெங்களூரு.. அடுத்து என்ன?