என்னது கச்சா எண்ணெய் 100 டாலரா...? யாருக்கு சாதகம்... யாருக்கு பாதகம்... முழு விபரம்!
எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு இந்த விலையேற்றம் சாதகம். ஆனால் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு இது பெரும் பாதகமாகவே முடியும்
பொருளாதாரத்தை தீர்மானிப்பதில் கச்சா எண்ணெய்க்கு முக்கிய பங்கு இருக்கிறது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுமார் 70 டாலர் அளவுக்கு இருக்கிறது. ஆனால் அடுத்த ஆண்டில் ஒரு பேரல் 100 டாலரை கச்சா எண்ணெய் தொடும். 2023-ம் ஆண்டிலும் தேவை உயர்ந்து கச்சா எண்ணெயின் உயர்ந்தே இருக்கும் என கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கணித்திருக்கிறது.
தற்போது கச்சா எண்ணெயின் தேவை அதிகமாக இருக்கிறது. வரும் காலத்தில் இன்னும் தேவை அதிகரிக்கும். விமான போக்குவரத்து நாளுக்கு நாள் உயரும். கோவிட்டின் புதிய உருமாற்றமான ஒமைக்ரான் பரவினாலும் சர்வதேச அளவில் தேவை குறையாது. ஒரு வேளை லாக்டவுன் அறிவிக்கப்பட்டாலும் கூட குறிப்பிட்ட பிராந்தியத்தில் பகுதி பகுதியாகதான் லாக்டவுன் இருக்கும். அதனால் கச்சா எண்ணெய்க்கான தேவை குறையாது.
ஒமைக்ரான் பரவல் ஒருவேளை அதிமாக இருந்தாலும் கூட, அடுத்த ஆண்டின் முதல் பாதியில்தான் இருக்கும். அடுத்த ஆண்டு இறுதி மற்றும் 2023-ம் ஆண்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலர் அளவில் இருக்கும். அடுத்த ஆண்டில் சராசரியாக 85 டாலர் என்னும் அளவில் கச்சா எண்ணெய் விலை இருக்கும். அவ்வப்போது இதிலிருந்து கூடுதல் விலையையும் தொடக்கூடும் என கோல்ட்கேன் சாக்ஸ் தெரிவித்திருக்கிறது.
சர்வதேச அளவில் பணவீக்கம் உயர்ந்துவருகிறது. இதனால் கச்சா எண்ணெய் எடுக்கும் செலவுகளும் அதிகரிக்கும். விலை உயர்வதற்கு இதுவும் ஒரு காரணம். மேலும் சர்வதேச அளவில் உருவாகும் தேவைக்கு ஏற்ப கச்சா எண்ணெய் உற்பத்தி இருக்குமா என்பதும் கேள்விக்குறி. இதன் காரணமாகவும் விலை உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
மூன்றாவதாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் முடிவு. அடுத்த ஆண்டில் மூன்று முறை வட்டியை உயர்த்த இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இதனால் டாலர் பலமடையும். அதன் காரணமாக முக்கிய கமாடிட்டிகளின் விலை உயரும். கச்சா எண்ணெய் விலை உயரும். இந்த வட்டி விகித உயர்வு எவ்வளவு விரைவாக நடக்கிறதோ அவ்வளவு விரைவாக கச்சா எண்ணெய் விலை உயரும். மேலும் 100 டாலர் என்பது 2022-23-ம் ஆண்டுகளில் தவிர்க்க முடியாது. அதிகபட்சம் 110 டாலர் கூட செல்லலாம் என கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்திருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை அதிகமாக 2008-ம் ஆண்டு 145 டாலர் அளவுக்கு உயர்ந்தது. அதன் பிறகு கடுமையாக சரிந்தது. சில ஆண்டுகளுக்கு ஏற்ற இறக்கமாக இருந்த கச்சா எண்ணெய் 2011,2012,2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் ஒரு பேரல் 100 டாலரை தாண்டியது. 2014-ம் ஆண்டு இரண்டாம் பாதிக்கு மேல் கச்சா எண்ணெய் விலை குறையத்தொடங்கியது. அதன் பிறகு இதுவரை 100 டாலர் என்னும் எல்லையை கடக்கவில்லை. 2020-ம் ஆண்டு சர்வதே அளவில் லாக்டவுன் இருந்ததால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்தது. தற்போது மெல்ல மெல்ல உயர்ந்து 70 டாலர் என்னும் அளவில் இருக்கிறது.
எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு இந்த விலையேற்றம் சாதகம். ஆனால் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு இது பெரும் பாதகமாகவே முடியும். அடுத்த ஆண்டில் 100 டாலரை தொடுமா?