ஜன.1 முதல் காசோலை பணப்பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு - அமலாகும் புது விதி என்ன?
ரூ.50,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைக்கு புதிய அல்பா-நியூமரிக்கல் குறியீடு கொண்ட காசோலை கட்டாயம்

2027 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிமுதல் புதிய காசோலை விதிகள் அமல்படுத்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
புதிய விதியால் வரப்போகும் மாற்றம் என்ன?
புது விதிகளின்படி பழைய காசோலைகளை ரூ. 50,000-க்கும் குறைவான தொகையை பரிவர்த்தனை செய்ய மட்டுமே பயன்படுத்த இயலும் எனவும், ரூ.50,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகைக்கு புதிய அல்பா-நியூமரிக்கல் குறியீடு கொண்ட காசோலைகளைப் பயன்படுத்துவது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசோலைகளில் இதுவரை வெறும் எண்கள் மட்டுமே காசோலை எண்ணாக இருந்தன. இனி வங்கி, கிளை மற்றும் மண்டலக் குறியீடுகள் இணைந்த எழுத்துகள் மற்றும் எண்கள் கலந்த (Alphanumeric) குறியீடு இடம்பெற உள்ளது.
காசோலையில் வங்கிக் கணக்கு எண்ணுக்கு கீழ், புற ஊதாக் கதிா்(UV) ஒளியில் மட்டுமே காணக் கூடிய வகையிலான சிறப்புக் குறியீடு உள்ளிட்டவை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது. காசோலைகளில் எழுதுவதற்கு பால்பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ள ரிசர்வ் வங்கி, ஜெல் பேனாக்களைப் பயன்படுத்தக் கூடாது எனவும் பெயர், தேதி அல்லது தொகையில் எந்தவொரு திருத்தமோ அல்லது அடித்துவிட்டு எழுதுவதோ கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.
டிஜிட்டல் ரீதியிலான பணப்பரிமாற்றம் பரவலாக காணப்படும் நிலையில், பெருந்தொகைகளை பரிமாற்றம் செய்ய இன்றளவும் காசோலையே பிரதான தேர்வாக உள்ளது. காசோலை வழிப்பணப் பரிமாற்றத்தில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தவும், வழிமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கிலும் புதிய விதிகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























