GST Council Meeting: ஸ்விகி- ஜோமேடோ மீது 5% ஜிஎஸ்டி வரி - உணவுப் பொருட்களின் விலை உயருமா?
இந்தியாவில் மது வகைகள், பெட்ரோல் தவிர அனைத்துப் பொருட்களும் சேவைகளும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டு விட்டன
ஸ்விகி- ஜோமேடோ போன்ற போன்ற மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுத்துள்ளது. இதன்படி, உணவு விநியோகம் செய்யும் ஆன்லைன் செயலிகள் உணவகங்களாக கருதப்படும். உணவு விநியோகத்துக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நாளை நடைபெறுகிறது.
உணவகங்களில் வாங்கும் உணவு பொருட்களுக்கு ஏற்கனவே ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. அதனை விநியோகம் செய்யும் (ஸ்விக்கி) மின் வணிக (e-commerce) நிறுவனங்களாக வரி விதிக்கப்படுவதில்லை. தற்போதுள்ள ஜிஎஸ்டி நடைமுறையின் படி, இந்த செயலிகள் டிசிஎஸ் (TCS - Tax Collection at Source) என்று பதிவு செய்துள்ளது.
இந்த பரிந்துரைக்கு நாளை ஒப்புதல் அளிக்கப்பட்டால், ஸ்விகி- ஜோமேடோ போன்ற உணவு விநியோக நிறுவனங்கள் தங்கள் மென்பொருளில் மாற்றம் செய்ய சிறிது காலம் அவகாசம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஏன் இந்த வரி?
உணவு விநியோக செயலிகள் மூலமாக, உணவை அளிக்கும் ஓட்டல்கள் முறையாக ஜிஎஸ்டி செலுத்துவதில்லை என கண்டறியப்பட்டது. அதன் காரணமாக, ஆன்லைன் உணவு டெலிவரி ஆப்களும், ஓட்டல்களாக கருதப்பட்டு, அவர்கள் டெலிவரி செய்யும் உணவுகளுக்கான ஜிஎஸ்டி வரியை அரசுக்கு செலுத்தும் படி மாற்றப்பட உள்ளது. ஏற்கனவே உணவுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதால் இந்த மாற்றம் காரணமாக ஓட்டல் உணவுகளின் விலை உயராது என அரசு தரப்பில் கூறப்படுகிறது. நடுத்தர ஓட்டல்கள் ஜிஎஸ்டி வரி முறையாக செலுத்தாத காரணத்தினால் கடந்த 2 ஆண்டில் மட்டும் அரசுக்கு ரூ.2000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி முறையின் கீழ் பெட்ரோல், டீசல்:
மேலும், நாளைய ஜிஎஸ்டி கூட்டத்தில், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி முறையின் கீழ் கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் மது வகைகள், பெட்ரோல் தவிர அனைத்துப் பொருட்களும் சேவைகளும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டு விட்டன. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர பல காலமாக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையைப் பொறுத்து உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் கூட எரிபொருள் விலையை அரசு குறைப்பதில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. அதற்கு, மத்திய அரசோ முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பெறப்பட்ட ஆயில் பாண்ட் எனப்படும் எண்ணெய் பத்திரங்கள் மூலமாக ஏற்பட்டுள்ள கடன் சுமை காரணமாகவே பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியவில்லை என்று கூறி வருகிறது.