Union Budget 2022- 23: நில ஆவணங்கள் நவீனமயமாக்கப்படும் - ஒரே நாடு ஒரே பதிவுமுறை திட்டம் செயல்படுத்தப்படும் - நிர்மலா சீதாராமன்
ஒவ்வொரு நிலத் தொகுப்புக்கும் பிரத்யேக அடையாள எண்ணுடன் கூடிய 14 இலக்க பிரத்யேக நிலத் தொகுப்பு அடையாள எண்ணும் (Unique Land Parcel Identification Number (ULPIN) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒரே நாடு ஒரே பதிவுமுறை கொண்டு வரப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். முன்னதாக, பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முன்னதாக, நாட்டில் வெளிப்படையான மற்றும் ஒருங்கிணைந்த நிலத் தகவல் மேலாண்மை அமைப்பை உருவாக்குவதற்காகவும், நில ஆவணங்களை டிஜிட்டல் மற்றும் நவீனமயமாக்கவும், டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனப்படுத்துதல் திட்டத்தை 2008-09-ஆம் ஆண்டு மத்திய அரசு தொடங்கியது. இதன்மூலம், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் அளவு செய்து நில உரிமை விபரங்களை பதிவு செய்தல், ஊரக பகுதி நிலப் பதிவேடுகள் கணினிமயமாக்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த திட்டம் கடந்த 2016ன் ஆண்டு டிஜிட்டல் இந்திய நில ஆவணங்களை நவீனமயமாக்கல் திட்டம் என்று மறு உருவாக்கம் செய்யப்பட்டு அதற்கான 100% விழுக்காடு நிதியை மத்திய அரசால் வழங்கப்படும் என்று அறிவித்தது.
இதன் கீழ், நாடு முழுவதும் ஆவணங்கள் மற்றும் சொத்துகளின் பதிவுக்காக ‘ஒரே தேசம், ஒரே மென்பொருள்’ என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. முதற்கட்டமாக, அந்தமான் & நிகோபார் தீவுகள், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, கோவா, ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, மணிப்பூர், மிசோராம், பஞ்சாப் ஆகிய பத்து மாநிலங்களில் ஒரே வகையான மென்பொருள் மூலம் ஆவணங்கள் மற்றும் சொத்துகளின் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், ஒவ்வொரு நிலத் தொகுப்புக்கும் பிரத்யேக அடையாள எண்ணுடன் கூடிய 14 இலக்க பிரத்யேக நிலத் தொகுப்பு அடையாள எண்ணும் (Unique Land Parcel Identification Number (ULPIN) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் ஆதார அடையாள எண் இருப்பது போன்று, ஒவ்வொரு நிலத் தொகுப்புக்கும் பிரத்தியோக எண் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது, இதன் தொடர்ச்சியாக ஒரே நாடு ஒரே பதிவுமுறை கொண்டு வரப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இருப்பினும், தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு அதிக வருமானம் பத்திரப்பதிவில் வரும். ஒரே நாடு ஒரே பதிவு இதனை குறைக்கலாம் என்று கருத்துகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.