Tamil Nadu Budget 2024-25: நாளை தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்! இன்று இலட்சினை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!
வரும் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் அதிகபட்ச மக்களவை தொகுதிகளை கைப்பற்றும் நோக்கில் ஆளும் திமுகவுக்கு இது முக்கியமான பட்ஜெட்டாக இருக்கும்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கைக்கான முத்திரைச் சின்னம்
2024-2025 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பிப்ரவரி 19ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 20ம் தேதி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
தொடர்ந்து பிப்ரவரி 21ம் தேதி சட்டப்பேரவை துணை மதிப்பீடுகளுக்கான கோரிக்கை முன்வைக்கப்படும். அதன் தொடர்ச்சியாக, 2024-2025 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் ஆகிய இரண்டு குறித்த விவாதங்கள் காலை மற்றும் மாலை என இரண்டு அமர்வுகளிலும் நடைபெறும். இத்துடன் சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைகிறது.
இது எப்படியான பட்ஜெட்டாக இருக்கும்..?
இன்னும் சில நாட்களில் மக்களவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று தங்களது கட்சிகள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஒவ்வொரு கட்சியும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், வரும் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் அதிகபட்ச மக்களவை தொகுதிகளை கைப்பற்றும் நோக்கில் ஆளும் திமுகவுக்கு இது முக்கியமான பட்ஜெட்டாக இருக்கும்.
நிதிநிலை அறிக்கை - இலட்சினை வெளியீடு:
2024-25ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கைக்காக ‘தடைகளைத் தாண்டி’ என்ற தலைப்பில் முத்திரைச் சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கைக்கான முத்திரைச் சின்னத்தை வெளியிட்டது தமிழக அரசு. நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முழங்கிடும் முத்திரை சின்னம் என தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “இன்று தமிழ்நாடு உயர்கல்வியில் முன்னணி மாநிலம்! மருத்துவத் துறையில் முன்னணி மாநிலம்! தொழில்துறையில் முன்னணி மாநிலம்! இந்தியப் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ள முன்னணி மாநிலம்! வேளாண்மையில் முன்னணி மாநிலம்! விளையாட்டுத் துறையில், இளைஞர்தம் ஆற்றல் நிறைந்துள்ளதில் முன்னணி மாநிலம் என எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டு எத்திசையிலும் புகழ் பதித்துத் திகழ்கின்றது. ஏடும். நாடும் இதர மாநிலங்களும் இதற்குச் சான்று பதிக்கின்றன.
இந்நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற மே 2021-ஆம் ஆண்டில் ஆட்டிப்படைத்த கொரோனாவை முறியடித்து. காலமல்லாக் காலத்தே புயலும், மழையும், வீசி கடும் சேதங்களை விளைவித்த நிலையிலும், மக்களின் துயர் நீக்கி. நமது மாநிலத்திற்கு இயல்பாக வரவேண்டிய நிதிகளும், உதவிகளும். ஒத்துழைப்பும் கிடைக்காமல் தடைகள் பல தொடர்கின்ற நிலையிலும், முறையான, சிதையாத, கட்டுப்பாடான நிர்வாக நடைமுறைகளால் தடைகளை எல்லாம் தகர்ந்தெறிந்து. தொடர்ந்து முன்னேற்றத் திசையினில் தமிழ்நாட்டினை செலுத்திடும் நோக்கில் இந்த திராவிட மாடல் அரசு "எல்லோர்க்கும் எல்லாம்" என்ற இலக்கினை எளிதில் எய்திடும் வண்ணம்
இன்று நான்காம் ஆண்டில் நிதிநிலை அறிக்கையைப் பேரவையில் அளிப்பதில் பெருமிதம் கொள்கிறது.
தமிழ்நாடு அரசின் 2024-25 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை "தடைகளைத் தாண்டி" எனும் தலைப்பில் பேரவையில் பெருமிதத்துடன் அளிக்கப்படுவதைக் குறிக்கும் சின்னமாக நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னம் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.
"யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே" எனும் பழமொழிக்கேற்ப வரும் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கிடும் முத்துச் சின்னமாக இது விளங்கிடும் என்பது திண்ணம்.” என தெரிவிக்கப்பட்டது.
“தடைகளைத் தாண்டி” 2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கும் முத்திரைச் சின்னம்#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @TThenarasu pic.twitter.com/yLVRiMSPo2
— TN DIPR (@TNDIPRNEWS) February 18, 2024
கடந்த ஆண்டு விவசாய பட்ஜெட்:
2023 தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட்டில் ட்ரோன்கள் மற்றும் ரிமோட் சென்சிங் போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்தது. மேலும், விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதற்கும், விவசாயத் துறையில் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் தொழில்கள் மற்றும் பிற தொடர்புடைய பங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.