Droom joins Unicorn club: யூனிகார்ன் மைல்கல்லை அடைந்த ட்ரூம் - யார் இந்த சந்தீப் அகர்வால்?
வாகனத்தை வாங்கும்போது 120-க்கும் மேற்பட்ட செக்லிஸ்ட் உருவாக்கி அவற்றை சரிசெய்தோம். இந்த தகவல்கள் அடிப்படையாக வைத்து விலையை நிர்ணயம் செய்தோம் - சந்தீப் அகர்வால்
கொரோனா பெரும் பொருளாதார ரீதியிலான பாதிப்புகளை பலருக்கும் ஏற்படுத்தி இருந்தாலும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு எந்த சிக்கலும் இல்லாமல் தொடர்ந்து நிதி கிடைத்து வருகிறது. 2020-21-ஆம் ஆண்டில் மட்டும் பல நிறுவனங்கள் யூனிகார்ன் (100 கோடி டாலர்) நிலையை அடைந்திருக்கின்றன. இந்த பட்டியலில் சமீபத்திய வரவு ட்ரூம்(Droom). யுனிகார்ன் பட்டியலில் இந்த ஆண்டு இணையும் 17வது நிறுவனம். சமீபத்தில் இந்த நிறுவனம் 20 கோடி டாலர் அளவுக்கு நிதி திரட்டி இருக்கிறது. (இதற்கு முன்பாக கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபரில் 3 கோடி டாலர் அளவுக்கு நிதி திரட்டியது) இதன் மூலம் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 120 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது.
ஏற்கெனவே முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் புதிய முதலீட்டாளர்கள் இந்த முறை முதலீடு செய்திருக்கிறார்கள். கார்ஸ் 24, கார்டிரேட், கார்டெகோ நிறுவனங்களை போல ஆட்டோமொபைல் துறையில் வாகனங்களை வாங்குவது மற்றும் விற்கும் பணியை செய்துவருகிறது. இது தவிர ஆட்டோமொபைல் துறையில் உள்ள இதர சேவைகளையும் இந்த நிறுவனம் வழங்குகிறது. வாகனம் வாங்குவது, விற்பது, வாடகை, எக்ஸ்சேஞ்ச், காப்பீடு உள்ளிட்ட பல சேவைகளை இந்த நிறுவனம் வழங்குகிறது.
கோவிட்டுக்கு பிறகு தனிநபர் வாகனங்கள் பிரிவில் வாடிக்கையாளர்கள் அதிகம் கவனம் செலுத்தியதால் ட்ரூம் போன்ற நிறுவனங்களின் வளர்ச்சி சற்று அதிகமாகவே இருக்கிறது. தற்போது ஆன்லைன் மூலமாக வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை 0.7 சதவீதமாக இருக்கிறது. 2025-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 7 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் மதிப்பு 22,500 கோடி டாலர்கள் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் புதிய மற்றும் பழைய வாகனங்களின் விற்பனை 16,000 கோடி டாலர். இதர சேவைகள் மற்றும் உதிரிபாகங்கள் 6,000 கோடி டாலர் டாலர் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. சர்வதேச அளவிலும் ஆன்லைன் மூலமாக வாகனங்களை வாங்குவது உயரந்துவருகிறது. ஐசிஇ வாகனங்கள் மட்டுமல்லாமல் எலெக்ட்ரிக் வாகனங்களையும் வாங்குவதும் உயர்ந்திருக்கிறது.
தற்போது கிடைத்துள்ள நிதிமூலம் இந்தியாவின் முக்கியமான நகரங்கள் மற்றும் சர்வதேச சந்தையில் களம் பதிக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. மேலும் அடுத்த ஆண்டு ஐபிஓ வெளியிட இருப்பதாகவும் தெரிகிறது. அதே சமயம் இந்த ஐபிஓ இந்திய சந்தையில் அல்லாமல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக்கில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன
சந்தீப் அகர்வால்:
கடந்த 2014-ம் ஆண்டு இந்த நிறுவனத்தை உருவாக்கியவர் சந்தீப் அகர்வால். ஆனால் இவர் ஏற்கெனவே ஷாப் குளூஸ் என்னும் நிறுவனத்தையும் உருவாக்கி இருக்கிறார். இந்தியாவில் யுனிகார்ன் நிலையை அடைந்த ஐந்தாவது நிறுவனம் இது. ஒரு நிறுவனர் இரண்டு யுனிகார்ன் நிறுவனங்களை உருவாக்கி இருப்பது இதுவே இந்தியாவில் முதல் முறையாகும்.
2010-ம் ஆண்டு அமெரிக்காவில் இருக்கும்போது ஷாப்க்ளூஸ் என்னும் நிறுவனத்தை தன் மனைவி மற்றும் நண்பருடன் இணைந்து தொடங்கினார். அடுத்த சில மாதங்களில் இந்தியா வந்து ஷாப்க்ளூஸ் நிறுவனத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். 2014-ம் ஆண்டு யுனிகார்ன் நிலையையும் அடைந்தது. ஆனால் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் சூழல் உருவானது.
ஷாப்குளூஸ் தொடங்குவதற்கு முன்பு அமெரிக்காவில் வேலை செய்த நிறுவனத்தில் நடந்த இன்சைடர் ட்ரேடிங் பிரச்சினைக்காக இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அதனால் நிறுவனத்தை காப்பாறுவதற்காக அந்த நிறுவனத்தில் இருந்து விலகினார். அதன் பிறகு சில மாதங்களுக்கு பிறகு உருவாக்கப்பட்ட நிறுவனமே ட்ரூம்.
ஷாப்குளூஸ்-ல் இருந்து விலகிய பிறகு 52 ஐடியாகளை யோசித்திருக்கிறார். அதில் இருந்து இரு ஐடியாகள் இறுதிசெய்யப்பட்டன. ஒன்று வாலட் மற்றொன்று ஆட்டோமொபைல். ஏற்கெனவே வாலட் பிரிவில் பேடிஎம் நிறுவனம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டதால் ட்ரூம் நிறுவனத்தை தொடங்கினார்.
நாங்கள் தொடங்கும் தொழிலில் டெக்னாலஜி முக்கிய பங்கு வகிக்க வேண்டும், அந்த தொழில் வளர்ச்சி அடைவதாக இருக்க வேண்டும் அதே சமயம் அதிக லாப வரம்பும் இருக்க வேண்டும். ஆட்டோமொபைல் பிரிவில் மூன்றும் இருந்ததால் ட்ரூம் தொடங்கினோம்.
தவிர இந்த தொழிலில் நாங்கள் தீர்ப்பதற்கு சில பிரச்சனைகள் இருந்தன. பயன்படுத்தப்பட்ட கார்களில் நான்கு பிரச்சனைகள் இருந்தன. வாகனத்தின் தற்போதைய நிலை குறித்த தெளிவின்மை, விலை, ஆவணங்கள் மற்றும் காப்பீடு தொடர்பாக தகவல்கள் மற்றும் விற்பனையாளரின் நம்பகத்தன்மை உள்ளிட்ட சிக்கல்கள் இருந்தன. முதலில் நம்பிக்கையை உருவாவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தோம். வாகனத்தை வாங்கும்போது 120-க்கும் மேற்பட்ட செக்லிஸ்ட் உருவாக்கி அவற்றை சரிசெய்தோம். இந்த தகவல்கள் அடிப்படையாக வைத்து விலையை நிர்ணயம் செய்தோம். விற்பனையாளருக்கு பணம் கிடைக்கும்போது அதில் இருந்து கமிஷன் எடுத்துக்க்கொள்கிறோம் என சந்தீப் தெரிவித்திருக்கிறார்.
தற்போது நிறுவனத்தின் வருமானம் 5.4 கோடி டாலராக இருக்கிறது. இந்த ஆண்டு முடிவுக்கு 6.5 கோடி டாலர் வருமானத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லாபத்தை நெருங்கி வருவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 10 ஆண்டுகளில் இரண்டு யுனிகார்ன் நிறுவனங்களை உருவாக்குவது எளிதல்ல. அசாதாரண விஷயத்தை சாத்தியமாக்கி இருக்கிறார் சந்தீப் அகர்வால்.
ABP Desam: உதயமானது 'ஏபிபி தேசம்'