ஓடு அமெரிக்கா...ஓடு! ஒரு வல்லரசுக்கு நேர்ந்த இழிவான முடிவு!
தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்குச் சென்றிருக்கிறது ஆப்கானிஸ்தான். அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் வாழும் தனது குடிமக்களை வெளியேற்றப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. தி நியூயார்க் டைம்ஸ் இதழ் முதல் தொலைக்காட்சி, மொபைல் போன் செய்திகள் வரை தலைப்புச் செய்திகளாக இந்த நிகழ்வு நிரப்பப்பட்டு வருகிறது. அமெரிக்க அரசின் செயலாளர் அந்தோணி ப்ளிங்கென் தொலைக்காட்சிகளில் பைடன் அரசின் ராணுவ விலகல் முடிவை ஆதரித்துப் பேசிக் கொண்டிருந்த போது, ‘இது நிச்சயமாக மற்றொரு சைகோன் அல்ல’ என்று அதிரடியான வாக்கியம் ஒன்றை உதிர்த்தார். 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று, வடக்கு வியட்நாமியப் படைகள் சைகான் நகரத்தைக் கைப்பற்றிய போது, அமெரிக்க அவமானகரத் தோல்வி ஒன்றைத் தழுவியது. அதனை இந்த நிகழ்வுகளோடு ஒப்பிடுவதைத் தவிர்த்து அமெரிக்க மக்களிடம் அவமானத்தை மறைக்கிறார் அந்தோணி. அப்போதும், இப்போதும் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் ராணுவ வீரர்களைக் காத்து, பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற படம் பிரபலமானதாகக் கருதப்படுகிறது. அப்போது கம்யூனிஸ்ட்களிடம் இருந்து தப்பித்தார்கள்; தற்போது இஸ்லாமியத் தாலிபான்களிடம் இருந்து தப்பித்திருக்கிறார்கள். எது எப்படியோ, போர்க்களத்தில் இருந்து மீண்டும் ஓடி வந்திருக்கிறது அமெரிக்கா. போர்க்களமே அமெரிக்கா உருவாக்கியது தான்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின், ராணுவ வல்லரசாக உருவான அமெரிக்கா மீண்டும் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியுள்ளது. இந்தத் தோல்வியின் அளவை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. பல்வேறு விமர்சகர்கல் இந்தத் தோல்வியைக் குறைத்து மதிப்பிடுகின்றனர். சிலர் இதனை ‘அவமானம்’ என்று அழைக்கின்றனர். வேறு சிலர், இதனை ‘அமெரிக்கத் தன்மானத்தின் இழப்பு’ என்று வர்ணிக்கின்றனர். இன்னும் சிலரோ, அமெரிக்க ராணுவம் பலம் குறைந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆக, இதை ஆப்கானிஸ்தானில் முடிவடைந்துள்ள அமெரிக்காவின் காலம் என்று மட்டுமே கருத முடியாது. மேலும், இதை அமெரிக்கா ராணுவத்தை விலகுவதற்கு ஒப்புக்கொண்டதாகவும், பைடனும் அவரது ஆலோசகர்களும் ஆப்கன் ராணுவத்தின் திறமையைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாகவும் நாம் கருதிவிட முடியாது. இப்படியான மதிப்பீட்டின் மூலம், அமெரிக்கா தற்போது பெற்றிருக்கும் அவமானத்தை வெறும் போர்த்திறன் குறைவு என்றும், பைடனுக்கு முந்தைய ஆட்சியாளர்களின் கொள்கையின் தோல்வி என்றும் சுருக்கிவிடுகிறோம். எனினும், அமெரிக்க மக்களுக்குத் தற்போது போருக்காக செலவு செய்யப்பட்ட ட்ரில்லியன் டாலர்கள் மீது கேள்வி எழும்பியுள்ளது. சுமார் 20 ஆண்டுக்கால போரில், ராணுவத்திற்காகவும், அமெரிக்காவின் இருப்பை ஆப்கானிஸ்தானில் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், புதிய தேசம் ஒன்றைக் கட்டமைப்பதற்காகவும் இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்கர்கள் புதிய நாடு ஒன்றைத் தீவிரவாதத்தின் பிடியில் இருந்து மீட்கவும், பழங்குடியினக் காட்டுமிராண்டிகளுக்கு நாகரிகத்தைக் கொண்டு செல்லப் போகிறோம் என்றும் தங்கள் வரிப்பணத்தைக் கொடுத்திருக்கின்றனர். எனினும், இப்படியான பார்வையின் வழியாக, ராணுவக் கலாச்சாரம் என்ற மற்றொரு காட்டுமிராண்டித்தனத்தைக் குறித்த அறியாமை, சுதந்திரத் தாகத்தை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்கர்களிடம் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய சக்திகளோடு இணைந்து ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளில் மட்டுமே அமெரிக்கா வெற்றிபெற்றிருக்கிறது. அதன்பிறகு தான் பங்கேற்ற எந்தப் போரிலும் அமெரிக்கா வெல்லவில்லை என்பதே உண்மை. 1950ஆம் ஆண்டு ஜூன் முதல் 1953ஆம் ஆண்டு ஜூலை வரை நிகழ்ந்த கொரியப் போரில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றின் மூலம் போரில் இருந்து அமெரிக்கா நழுவிய வரலாறு இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. வியட்நாமில் பிரென்ச் படைகளால் கம்யூனிசத்தைக் கட்டுப்படுத்த முடியாததைக் கண்ட அமெரிக்கா, அதனைக் கட்டுப்படுத்துவதை ஒரு பொறுப்பாக எடுத்துக் கொண்டு களமிறங்கித் தோற்றது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஈராக்கில் சதாம் உசேனை வீழ்த்துவதற்காக முதலில் அந்நாட்டை முழுவதுமாகத் தாக்கி கற்காலத்திற்கு அழைத்துச் சென்றது. பிறகு சில ஆண்டுகளில், சதாம் உசேனைப் பாதாள பங்கர் ஒன்றில் இருந்து இழுத்து வந்து, தூக்கு மேடைக்கு அனுப்பியது. இந்தச் சண்டையில், ஈராக்கில் ஜனநாயகத்தை அமல்படுத்தப் போவதாகக் கூறிவிட்டு, அந்த நாட்டைச் சிதறுத் துண்டுகளாக்கியது.
பிற நாடுகளில் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட விரும்பும் அமெரிக்காவுக்குச் சொந்த நாட்டிலேயே அதற்கான தேவைகள் அதீதமாக இருக்கின்றன. அமெரிக்காவில் வளர்ந்திருக்கும் வெள்ளையின வெறியர்களும், பிற நாட்டவர் மீதான வெறுப்பும் இதனைக் காட்டுகின்றன. மேற்கில் கல்வி பெற்ற பஷார் அல் அசாதின் சிரிய நாட்டை மற்றொரு ஈராக்காக மாற்றியது, லிபியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் முஅம்மர் அல் கடாபி அரசை வீழ்த்துவதற்காக அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையைப் பயன்படுத்தியது, அதற்காக ரஷ்யா, சவூதி அரேபியா முதலான நாடுகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டது முதலான நடவடிக்கைகள் இன்று அரபுலகத்தின் இயல்பைக் குலைத்துள்ளன. இவை அனைத்திற்கும் மேலாக, இருபது ஆண்டுகளாக போரை நடத்தியும், அமெரிக்க ராணுவத்தை ஆயுதம் தாங்கிய பழங்குடிகளிடம் வெறும் சில நாள் இடைவெளியில் சரணடையச் செய்துள்ளது. அமெரிக்கா பனிப்போரை வென்றதாக சிலர் வாதிடலாம். அப்படியென்றால், சோவியத் யூனியன் அழிந்து சுமார் 30 ஆண்டுகளான பிறகும், ஏன் அமெரிக்கா பனிப்போரை வென்றதாக மட்டுமே காட்டிக் கொள்கிறது என்றும், ஏன் நிஜமான போர்களை அதனால் வெல்லை முடியவில்லை என்றும் நாம் கேள்வி எழுப்பலாம்.
அதீத ராணுவ அதிகாரத்திற்கு வரைமுறைகள் இருப்பதோடு, அது ஒரு சுமை என்பதும் தற்போது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபனமாகியுள்ளது. இது மற்ற வல்லரசுகளுக்கு, குறிப்பாக சீனாவுக்கு, ஒரு பாடமாக இருக்க வேண்டும். வரலாற்று ஆய்வாளர்கள் கூறும் ‘வரலாற்றுப் பாடம்’ குறித்து வல்லரசுகள் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதையே இது காட்டுகிறது. அமெரிக்கா எப்போதும் அதன் ராணுவத் தோல்விகளை ஏற்றுக் கொண்டதேயில்லை. மேலும், ராணுவ அதிகாரிகளும் தற்போது ஒரு கையைப் பின்னால் கட்டிக் கொண்டு போருக்குச் செல்லக் கூடாது என்ற பாடத்தைக் கற்றிருக்கிறார்கள். இனி அமெரிக்காவின் போர் தந்திரங்கள் ஒழுங்கற்ற யுத்தங்களை அடக்குவதைப் பற்றி இருக்கப் போகிறது. அல் காய்தா, தாலிபான், ஐ.எஸ்.ஐ.எஸ் முதலான ஜிகாதி குழுக்களுடனான போர்களில் இருந்து அமெரிக்கா இதனைக் கற்றுக் கொண்டிருக்கும். எனினும், இவை எதுவும் முன்பு ராணுவ அதிகாரம் பெற்றுவந்த அனுகூலங்களைக் குறித்த தெளிவற்ற கருத்துகளை உருவாக்கிவிடக் கூடாது. அமெரிக்க அரசு வியநாம், கொரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் போர் புரிந்திருந்தாலும், ஜெர்மனியை அமெரிக்கா வெற்றிகொண்ட விவகாரத்தில் ஒன்று பேசப்படுவதில்லை. அமெரிக்காவும், ஜெர்மனியும் மேற்கு நாகரிகத்தின் விளக்குகளாக இருந்ததையும், இரு நாடுகளுக்கு இடையிலான பொதுவான கலாச்சாரம் குறித்தும் பேசப்படுவதில்லை. இது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தியது. ஆப்கானிஸ்தானின் மக்கள் மேற்கு ஊடகங்களால் பாராட்டப்படும் அமெரிக்க ராணுவத்தையும், தாலிபான்களைப் போல அச்சத்தோடு அணுகினர். எனினும் தாலிபான்கள் பஷ்டுன், டஜிக், உஸ்பெக் முதலான பழங்குடி இனங்களுக்கு இடையிலான கலாச்சார ஒற்றுமைகளைப் பயன்படுத்தி வெற்றிபெற்றிருக்கிறார்கள். தாலிபான்களின் மீள்வருகை என்பது மற்றொரு கட்டுரைக்கானது. அதை வெறும் வெளிநாட்டுக் கொள்கை, பூகோள அரசியல், ராணுவத் தந்திரம் என்று இல்லாமல், இப்படியான ஒரு கோணத்தில் அணுகவுள்ளேன்.