திருவண்ணாமலை : பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்த வைகாசி விசாகத் திருவிழா
கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் அண்ணாமலையார் திருக்கோயில் சிவாச்சாரியார்கள் முருகப்பெருமானை சுமந்து ஐந்தாம் பிரகாரம் வலம் வந்தார்கள்.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு வைகாசி விசாக திருவிழா இன்று நடந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அதைப்போல் அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வைகாசி விசாக விழா பக்தர்கள் இன்றி மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது .
வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரம் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரம். முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான இன்று அண்ணாமலையார் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமானுக்கு பச்சரிசி மாவு, அபிஷேக பொடி ,விபூதி, பால் தயிர், சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பலவகை மலர்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதன்பின்னர் வேதமந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து முருகப்பெருமான் அண்ணாமலையார் கோயில் 5-ஆம் பிரகாரத்தில் மங்கள இசை வாத்தியங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் வலம் வந்தார். கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் திருக்கோயில் சிவாச்சாரியார்கள் முருகப்பெருமானை சுமந்து ஐந்தாம் பிரகாரம் வலம் வந்தார்கள்.இந்நிகழ்வில் கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் அறிவுறுத்தலின் பேரில் உள்துறை மணியம் செந்தில், மற்றும் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.
முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாகம் குறித்த புராணம் என்ன?
வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள் முருகப் பெருமானின் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது விசாகம் வைகாசி அணி நாள் ஜோதி நாள் எனப்படுகின்றனர் இருபத்தேழு நட்சத்திரங்களில் விசாகமும் ஒன்று சூரபத்மன் முதலான அசுரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர். கருணைக் கடலாகிய சிவபெருமான் அசுரர்களுடைய கொடுமைகளிலிருந்து தேவர்களை காத்தருள விரும்பினார். தமது நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை தோற்றுவித்தார். அப்போது தீப்பொறிகளும் வாயு அக்னி தேவனால் கங்கையில் கொண்டு விடப்பட்டது. கங்கை சரவண பொய்கையில் கொண்டு சேர்ந்தது சரவண பூந்தோட்டத்தில்ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறின விஷ்ணுமூர்த்தி கார்த்திகை முதலிய கன்னியர்கள் மூலமாக அக்குழந்தைகளுக்கு பாலூட்டி வைத்து ஆறு தீப்பொறிகளும் குழந்தைகளான தினம் வைகாசி மாதத்தில் விசாக நாளாக கொண்டாடப்படுகிறது.