(Source: ECI/ABP News/ABP Majha)
அது என்ன 'திருநெல்வேலி'? அந்த பெயருக்கு காரணம் என்ன? ஆன்மீகம் சொல்லும் பெயர்க்காரணம் இதுதான்!
திருநெல்வேலி பெயர் காரண திருவிழா - வேதபட்டர் உணர்த்திய நெல்லை மழையிலிருந்து வேலியிட்டு சுவாமி நெல்லையப்பர் காத்த திருவிளையாடல் நிகழ்ச்சி தத்துரூபமாக நடத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலும் ஒன்று. இங்கு தைப்பூச தீர்த்தவாரி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு தைப்பூச திருவிழா கடந்த 9 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 12 நாள் நடைபெறும், தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை மற்றும் வீதியுலா நடைபெறும், 4 ஆம் நாளான நேற்று திருநெல்வேலி என பெயர் வரக் காரணமான திருவிழா சுவாமி சன்னதியில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்வு நடைபெற்றது.
முன்னொரு காலத்தில் சிவ பக்தரான வேதபட்டர் என்பவர் வேணுவனம் (திருநெல்வேலி) சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார். அப்போது வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார். இதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்கு சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார். ஒரு நாள் அவர் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லை காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார்.
அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. மழை பெய்ததால் இறைவன் நெய்வேத்தியத்திற்காக காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே என பதறியபடி கவலையுடன் இறைவனை வேண்டி அவர் கோயிலுக்கு ஓடி வந்தார். ஆனால் அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னன் நின்ற சீா் நெடுமாறனிடம் தெரிவித்தார். மன்னரும் இந்த அதிசயத்தை கண்டு வியந்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் வேணுவனம் என்று அமைக்கப்பட்ட இவ்வூா் நெல்வேலி என பெயர் பெற்று திரு என்ற அடைமொழியுடன் திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.
இறைவனின் திருவிளையாடலை நினைவுபடுத்தும் வகையில், சுவாமி சன்னதியில் மண்டபத்தின் அருகில் நெல்மணிகள் காய வைக்கப்பட்டது போலவும், மழை பெய்தது போலவும் நிகழ்வுகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கும், வேதபட்டர் மற்றும் பாண்டிய மன்னருக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது, இரவில் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்தி ரதவீதி உலா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றி குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு விழா நடைபெற்றது.