மயிலாடுதுறை ரயிலடி தூக்கணாங்குளம் தில்லை காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை ரயிலடி தூக்கணாங்குளத்தில் அமைந்துள்ள தில்லை காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை ரயிலடியில் தூக்கணாங்குளம் தென்கரையில் பழமையான, மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தில்லை காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. மேலும் இப்பகுதி மக்களின் வேண்டுதலை நிறைவேற்றும் கடவுளாக அருள்பாலித்து வருகின்றார். இத்தகைய புகழ் பெற்ற இக்கோயில் கிராமவாசிகளின் முயற்சியால் புதுப்பிக்கப்பட்டு அதன் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. முன்னதாக ஆகம விதிப்படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில்களில் நடைபெறும் குடமுழுக்கு விழாவை நடத்த அப்பகுதி கிராம மக்கள் முடிவெடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் பங்களிப்புடன், கோயில் குடமுழுக்கு பணிகளை தொடங்கினர். அதனைத் தொடர்ந்து சிலைகளை சீரமைத்தல் வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட கோயில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தை அடுத்து கும்பாபிஷேக விழாவிற்கான நாள் குறிக்கப்பட்டு, முன்னதாக விழா கடந்த 8 -ஆம் தேதி கணபதி ஹோமத்துடன், அனுக்ஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகளுடன் கும்பாபிஷேக விழாவிற்கான முதல் கால யாகசாலை தொடங்கியது. தொடர்ந்து தினசரி யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. கும்பாபிஷேக தினமான இன்று நான்காம் கால யாகசாலை பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் மகா பூர்ணாஹூதி மற்றும் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு, பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர், விமான கும்பத்தை அடைந்தனர்.
அங்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாளங்கள், வான வேடிக்கைகள் ஒலிக்க கோயில் கோபுர கலசத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேக விழாவை காண மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து மூலஸ்தானத்தில் உள்ள தில்லை காளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள முடியாத பக்தர்கள் இன்றிலிருந்து 48 தினங்கள் நடைபெற உள்ள மண்டல பூஜைகள் கலந்து கொண்டால், கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு தரிசித்த பயன்கள் முழுவதையும் அடைவார்கள் என்பது ஐதீகம் என்பதால், கோவிலில் நடைபெறும் மண்டல பூஜையில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்