திருப்பதியில் தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!
108 வைணவத் திருத்தலங்களில் கருடசேவை முக்கியமான வாகன சேவையாகும். அதேபோன்று ஏழுமலையான் கோயிலில் கருடசேவை மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு நேற்று தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். இரவு 7 மணிக்கு கோயில் எதிரே உள்ள வாகன மண்டபத்தில் இருந்து மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... என்ற கோஷத்துக்கு மத்தியில் வீதிஉலா வந்து அருள்பாலித்தார். இதில் ஜீயர்கள் மற்றும் அர்ச்சகர்கள் தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர்.
108 வைணவத் திருத்தலங்களில் கருடசேவை முக்கியமான வாகன சேவையாகும். அதேபோன்று ஏழுமலையான் கோயிலில் கருடசேவை மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
இரண்டாம் அலை கொரோனா பரவலின் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தளர்வுடன் ஊரடங்கு அமுலில் உள்ளதால் குறைந்த அளவில் பக்தர்கள் மட்டுமே தங்க கருட வாகனத்தில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
முன்னதாக, ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 300 ரூபாய் சிறப்பு டிக்கெட்டில் தரிசனத்திற்கு பதிவு செய்து வரமுடியாத பக்தர்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை தேதியை மாற்றி கொண்டு தரிசனம் செய்யலாம் என்றும், பக்தர்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு தினத்தை மட்டும் மாற்றிக்கொள்ள வேண்டும். அடிக்கடி தேதியை மாற்ற அனுமதி இல்லை எனவும் தேவஸ்தானம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்படும் என்பதால், திருப்பதி கோயிலில் கூட்டம் அலைமோதும். சாமியை தரிசனம் செய்வதற்கு, அறைகள் கிடைப்பதற்கு பெரும் சிரமமாக இருக்கும். ஆனால், கொரோனா அச்சத்தால், கடந்தாண்டு முதல் திருப்பதி கோயிலில் கூட்டம் குறைந்துள்ளது. ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டு சிறிது நாட்களுக்கு கூட்டம் சிறிது அதிகரித்து, உண்டியல் வசூலும் கூடியது. கொரோனா இரண்டாவது அலை தாக்கதால் மீண்டும் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் நடைபாதை ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், கோயில் பணியாளர்களின் பாதுகாப்பு கருதியும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் திருப்பதி வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருப்பினும் கோயிலில் அன்றாடம் நடைபெறும் பணிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. முன்பதிவின் படி தற்போது பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.