அனைத்து சாதியினரும் அர்ச்சகர்: 58 பேருக்கு நியமன ஆணைகள் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!
அர்ச்சகர்கள் கோயில் பணியாளர்கள் ஓதுவார்கள் உட்பட மொத்தம் 216 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற தமிழ்நாடு அரசின் அரசாணையின் கீழ் அர்ச்சகருக்கான பயிற்சி முடித்த அனைவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பணி நியமனத்துக்கான ஆணைகளை வழங்கினார். இந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களில் பயிற்சி முடித்த இந்த அர்ச்சகர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இதன்படி அர்ச்சகர் பயிற்சிப்பள்ளிகளில் பயிற்சி முடித்த 27 அர்ச்சகர்கள் உட்பட மொத்தம் 58 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். அர்ச்சகர்கள் கோயில் பணியாளர்கள் ஓதுவார்கள் உட்பட மொத்தம் 216 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. சென்னை மயிலாப்பூரின் கபாலீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வில் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன், அறநிலயத்துறை அமைச்சர் சேகர் பாபு, பேரூர் ஆதீனம், குன்றகுடி அடிகளார், ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் 1970ல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் அரசாணையின் கீழ் பணிநியமன ஆணைகள் வழங்குதல். https://t.co/HTaevkapUM
— M.K.Stalin (@mkstalin) August 14, 2021
விழா நிகழ்வில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சொற்பொழிவாளர் சுகிசிவம்,இராமகிருஷ்ணனுடைய சாதியிலிருந்து ஆன்மிக வாரிசு உருவாகாமல் விவேகானந்தர் என்னும் சத்திரியர் அவருக்கு அடுத்து வாரிசாக உருவானதால்தான் இந்து சமயம் தழைத்தது. நாடு சுபிட்சமடைய விவேகானந்தர்களை உருவாக்க வேண்டியது அவசியம்’ எனக் குறிப்பிட்டார்.
முன்னதாக, அறநிலையத்திற்கு சொந்தமான 47 கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார். அதற்கான பதாகையும் வெளியிடப்பட்டது. 05.08.2021 அன்று சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோயிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்ளிடம் பேசிய அவர், " தமிழில் அர்ச்சனை என்ற அறிவிப்பு ஒன்றும் புதிதல்ல. 1971ம் ஆண்டு, மறைந்த கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அப்போது இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்த கண்ணப்பன், கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிப்பாக வெளியிட்டார். 1974ம் ஆண்டு, இது தொடர்பான சுற்றறிக்கை இந்து அறநிலையத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விரும்புகிறவர்கள் மட்டுமே தமிழில் அர்ச்சனை மேற்கொள்ளலாம்.இதர மொழிகளில் மேற்கொள்ளப்படும் வழிபாடுகளை இத்திட்டம் தடுக்காது என்பதனை, 1998ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற விவாதத்தின் போது கலைஞர் கருணாநிதி தெளிவுபடுத்தியுள்ளார். பக்தர்கள் தங்கள் வழிபாடுகளுக்கு உகந்த மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதில், இருவேறுபட்ட கருத்துகளுக்கு இடமில்லை என்பதால் இன்று இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்" என்று தெரிவித்திருந்தார்.