டெங்கு காய்ச்சல் டூ பாராலிம்பிக் பதக்கம்- ஹர்விந்தர் சிங்கின் சாதனை பயணம் !
Tokyo Paralympics 2020: டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் ரிகர்வ் பிரிவு வில்வித்தையில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் ஆடவர் ரிகர்வ் பிரிவு தனிநபர் போட்டிகள் இன்று நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் ஹர்விந்தர் சிங் பங்கேற்றார். இவர் அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி வீரரிடம் தோல்வி அடைந்ததால் வெண்கலப்பதக்க போட்டிக்கு தகுதி பெற்றார். வெண்கலப்பதக்க போட்டியில் தென்கொரிய வீரர் கிம் சுவை 6-5 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றார்.
இந்நிலையில் யார் இந்த ஹர்விந்தர் சிங்? எப்படி பாரா வில்வித்தையில் நுழைந்தார்?
ஹரியானா மாநிலம் கைத்தால் மாவட்டத்தில் பிறந்தவர் ஹர்விந்தர் சிங். இவருக்கு ஒன்றரை வயதாக இருந்தப் போது டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்கு மருத்துவம் பார்க்க அவருடைய பெற்றோர் அருகே உள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்த மருத்துவர் தவறுதலாக வேறு ஒரு ஊசியை இவருக்கு செலுத்தியுள்ளார். இதனால் ஹர்விந்தருக்கு நடப்பதில் சிறிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சற்று சரியாக நடக்கமுடியாமல் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க பெற்றோர்கள் முன்வந்த போதும் தன்னுடைய குறை தனக்கு பெரிதாக தெரியவில்லை என்று கூறிவந்தார்.
அதன்பின்னர் மற்றவர்களை போல் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை தொடர்ந்தார். இவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பயிலும் போது 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்துள்ளார். அதில் குறிப்பாக வில்வித்தை போட்டியை பார்த்துள்ளார். இதனால் அவருக்கும் வில்வித்தை விளையாட்டின் மீது ஆர்வம் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து பாரா வில்வித்தை தொடர்பாகவும் இவருக்கும் தெரியவந்துள்ளது. எனவே அதில் பங்கேற்க வேண்டும் என்று இவர் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
2017ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் முதல் முறையாக பங்கேற்றார். அதில் 7ஆவது இடத்தை பிடித்தார். அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு ஆசிய பாரா வில்வித்தை போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். இந்தப் போட்டிக்கு 20 நாட்களுக்கு முன்பாக ஹர்விந்தர் சிங் தன்னுடைய அம்மாவை இழந்தார். அந்த பெரும் துயரம் தன்னுடைய விளையாட்டை பாதிக்காமல் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் வென்று இறந்த தன்னுடைய தாய்க்கு அப்பதக்கத்தை அர்பணித்தார்.
அதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா குழு வில்வித்தையில் வெண்கலப்பதக்கம் வென்றார். இந்த வெற்றிகளை தொடர்ந்து 2020ஆம் ஆண்டு நெதர்லாந்தில் நடைபெற்ற உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் 9ஆவது இடம் பிடித்து டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
அந்தப் பயிற்சிக்கு தற்போது வெண்கலப்பதக்கம் பரிசாக கிடைத்துள்ளது. தன்னுடைய வாழ்க்கையில் முதலில் சரியாக நடக்கும் வாய்ப்பை இழந்து, தன்னுடைய தாயையும் இழந்து இந்த பாராலிம்பிக் பதக்கத்தை வென்றுள்ளார். மேலும் பாராலிம்பிக் வரலாற்றில் இந்தியா சார்பில் வில்வித்தை போட்டியில் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார். இதனால் அவரின் வெற்றி எப்போதும் வரலாற்றில் நீங்காத இடம் பிடிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
மேலும் படிக்க: மிலிட்டரி TO பாராலிம்பிக்.. நூலிழையில் பதக்க வாய்ப்பை தவறவிட்ட சோமன் ரானா!