Tokyo Olympics: ஒலிம்பிக்ஸ் மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் : இரண்டாவது சுற்றில் மனிகா பட்ரா வெற்றி..!
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மனிகா பட்ரா இரண்டாவது சுற்றில் சிறப்பாக விளையாடி தரவரிசையில் 20ஆவது இடத்தில் உள்ள வீராங்கனையை வீழ்த்தினார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் முதல் நாளான நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல்-மனிகா பட்ரா இணை சீன தைபேவின் மூன்றாம் நிலை ஜோடியான லின்-செங் ஜோடியிடம் 4-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதன்பின்னர் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மானிகா பட்ரா மற்றும் சுதிர்தா முகர்ஜி ஆகியோர் தங்களுடைய முதல் சுற்றில் வெற்றிப் பெற்றனர்.
இந்நிலையில் மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவில் மனிகா பட்ரா மற்றும் உக்ரைன் நாட்டின் மார்கர்டேயா பெசோடஸ்காவை எதிர்த்து விளையாடினார். அதில் முதல் கேமை 5 நிமிடங்களில் உக்ரைன் நாட்டு வீராங்கனை 11-4 என வென்றார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது கேமிலும் உக்ரைன் நாட்டு வீராங்கனை ஆதிக்கம் செலுத்தினார். அந்த கேமையும் 6 நிமிடங்களில் 11-4 என்ற கணக்கில் வென்றார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது கேமை மானிகா பட்ரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதை 11-7 என்ற கணக்கில் மானிகா வென்றார். இதன்மூலம் 2-1 என உக்ரைன் வீராங்கனையின் முன்னிலையை குறைத்தார்.
Amazing news folks:
— India_AllSports (@India_AllSports) July 25, 2021
Star Indian paddler Manika Batra upset higher ranked Margaryta Pesotska (WR 32) 4-3 in 2nd round.
Next she will take on World No. 16 Sofia Polcanova for a place in Pre-QF. #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/Hhv1BGB7UE
இதற்கு பின் நடைபெற்ற நான்காவது கேமையும் மானிகா பட்ரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 12-10 என்று வென்றார். இதனால் இருவரும் 2-2 என்ற கணக்கில் சமனில் இருந்தனர். 5ஆவது கேமில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உக்ரைன் வீராங்கனை 11-8 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற 6ஆவது கேமில் மனிகா பட்ரா வென்றால் மட்டுமே 7ஆவது கேம் நடைபெறும் என்ற நிலை உருவானது. அதில் சிறப்பாக விளையாடிய மனிகா பட்ரா 11-5 என்ற கணக்கில் வென்றார். இதனால் இரு வீராங்கனைகளும் 3-3 என்ற சமனில் இருந்தனர். வெற்றியாளரை தீர்மானிக்க நடைபெற்ற கடைசி கேமில் மானிகா பட்ரா 11-5 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
முன்னதாக இன்று காலை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன் ஹாங்காங் வீரர் சியு ஹாங்கிடம் 11-7,7-11-7,4-11,5-11,11-9,12-10,11-6 என்ற கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். இதன்மூலம் முதல் சுற்றில் பை கிடைத்திருந்தால் இரண்டாவது சுற்றில் நேரடியாக களமிறங்கி தோல்வி அடைந்து சத்யன் ஞானசேகரன் ஒலிம்பிக் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் 1992ஆம் ஆண்டிற்கு பிறகு 29 ஆண்டுகள் கழித்து இந்திய வீராங்கனைகள் முதல் சுற்றில் வெற்றிப் பெற்றுள்ளனர்.
அதிலும் குறிப்பாக சர்வதேச தரவரிசை பட்டியலில் 98வது இடத்தில் இருக்கும் சுகிர்தா முகர்ஜி, 78-வது இடத்தில் இருக்கும் லிண்டா பெர்க்ஸ்டார்மை எதிர்கொண்டார். இந்த போட்டியின் ஆரம்பத்தில், சுகிர்தா சொதப்பினாலும், பின் சுதாரித்து கொண்டு கம்-பேக் கொடுத்தார். இந்த போட்டியில், 5-11, 11-9, 11-13, 9-11, 11-3, 11-9, 11-5 என்ற செட் கணக்கில் லிண்டாவை தோற்கடித்த அடுத்த சுற்றுக்கு சுகிர்தா முன்னேறினார்.
மேலும் படிக்க: டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் : வெற்றியுடன் தொடங்கினார் பி.வி.சிந்து..!