Paris Olympics 2024: விடைபெற்றார் லெஜண்ட் ரோஹன் போபண்ணா - சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பு
Paris Olympics 2024: சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய வீரர் ரோஹன் போபண்ணா அறிவித்துள்ளார்.
Paris Olympics 2024: சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இந்தியா சார்பில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரோஹன் போபண்ணா விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
ஓய்வை அறிவித்தார் ரோஹன் போபண்ணா:
இந்திய டென்னிஸ் ஜாம்பவான் ரோஹன் போபண்ணா சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 44 வயதான அவர் அதிகாரப்பூர்வமாக பாரிஸ் ஒலிம்பிக் 2024 தான், இந்திய அணிக்காக தான் விளையாடும் கடைசி போட்டி என தெரிவித்துள்ளார், அவர் இப்போது ஏடிபி டூர் நிகழ்வுகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். தனது ஓய்வை உறுதி செய்ததன் மூலம், 2026 ஆம் ஆண்டு ஐசிஹி-நாகோயாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ரோஹன் போபண்ணா இந்தியா சார்பில் களமிறங்கமாட்டார் என்பதும் தெளிவாகியுள்ளது. ரோஹன் போபண்ணா நடப்பாண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா சார்பில் களமிறங்கிய மிகவும் வயதான வீரர் ஆவார். ஆடவர் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றிலேயே அவர் தோல்வியுற்று வெளியேறிய நிலையில், இரண்டு தசாப்தங்களாக படைத்த பல வெற்றிகள் மற்றும் நினைவுகளுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
போபண்ணா பெருமிதம்:
ஓய்வு தொடர்பான அறிக்கையில், “நான் எங்கே இருக்கிறேன் என்பதை நான் முழுமையாக புரிந்துகொண்டேன், அது செல்லும் வரை டென்னிஸ் சுற்றுகளை ரசிக்கப் போகிறேன். நான் இருக்கும் இடத்திற்கு இது ஏற்கனவே ஒரு பெரிய போனஸ். 2002 ஆம் ஆண்டு முதல் இரண்டு தசாப்தங்களாக நான் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவேன் என்று நான் நினைக்கவில்லை, 22 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
டேவிஸ் கோப்பையை வென்றது எனது சிறந்த தருணம். ஒன்று சென்னையில் மற்றொன்று செர்பியாவுக்கு எதிராக பெங்களூருவில் ஐந்து-செட்டர் போட்டியை வென்றது. முதல்முறையாக ஆண்கள் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதும் சிறந்த தருணம். உலகின் நம்பர் 1 வீரர் இடத்தைப் பிடித்ததை மறக்க முடியாது. இந்தப் பயணத்தில் பல தியாகங்களைச் செய்த என் மனைவிக்கு (சுப்ரியா) நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என ரோஹன் போபண்ணா தெரிவித்துள்ளார்.
பயிற்சியாளராக திட்டம்?
இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க நான் தயாராக இருக்கும்போது நிச்சயமாக அந்த பணிகளை மேற்கொள்வேன். நான் இன்னும் போட்டிகளில் விளையாடிக் கொண்டு, பயணங்களை மேற்கொள்ளும்போது அதைச் செய்ய விரும்பவில்லை. காரணம் அதை நோக்கி எனது நூறு சதவீத அர்ப்பணிப்பை என்னால் கொடுக்க முடியாது எனவும் போபண்ணா தெரிவித்துள்ளார்.
தொடரும் ஏக்கம்..!
1996 ஆம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் லியாண்டர் பயஸ், மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்தார். அதன்பிறகு ஒருமுறை கூட இந்தியா டென்னிஸில் பதக்கம் வெல்லவில்லை. இந்த காத்திருப்பை கடந்த 2016ம் ஆண்டு, போபண்ணா மற்றும் சானியா மிர்ஷா ஜோடி, கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த ஜோடி நான்காவது இடத்தை பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.