Hockey, India Enters Semi-Finals: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி.. 1972க்கு பிறகு முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா !
1980 மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதிப் போட்டி நடைபெறவில்லை. புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி நேரடியாக தங்கப்பதக்க போட்டியில் விளையாடியது.
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் 4 வெற்றி மற்றும் ஒரு தோல்வி அடைந்து 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்தது. இதனால் இந்திய அணி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த பிரிட்டன் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் முதல் கால்பாதியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக 7ஆவது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய தில்பிரீத் சிங் ஒரு ஃபில்டு கோல் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி முதல் கால்பாதியின் முடிவில் 1-0 என முன்னிலை பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது கால்பாதியில் முதல் நிமிடத்திலேயே இந்திய அணியின் வீரர் குர்ஜாந்த் சிங் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து இரு அணியின் வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் முதல் பாதியின் முடிவில் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது கால்பாதியின் இறுதியில் பிரிட்டன் அணி ஒரு கோல் அடித்து 1-2 என்ற கணக்கில் முன்னிலையை குறைத்தது. இதனால் கடைசி கால்பாதி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் பிரிட்டன் அணியின் வீரர்கள் கோல் அடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். கடைசி கால்பாதியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஹர்திக் சிங் ஒரு கோல் அடித்தார். இறுதியில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் போட்டியை வென்றது. அத்துடன் அரையிறுதிக்கு முன்னேறியது.
𝗜𝗡𝗗𝗜𝗔 accomplish 𝗚𝗥𝗘𝗔𝗧 victory! 🎉#IND men’s #hockey team have made their way to the SEMI-FINAL for the first time in 49 years after defeating #GBR by 3-1 in the quarter-final match! 👏🙌#Tokyo2020 | #StrongerTogether | #UnitedByEmotion | @TheHockeyIndia
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 1, 2021
இந்திய ஹாக்கி அணி கடைசியாக 1980ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது. அதன்பின்னர் நடைபெற்ற எந்த ஒரு ஒலிம்பிக் போட்டியிலும் இந்திய அணி பதக்கம் வெல்லவில்லை. அந்த முறை ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதி போட்டி இல்லை. புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் விளையாடியது. கடைசியாக 1972ஆம் ஆண்டு ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. அதன்பின்னர் தற்போது 49 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. வரும் 3ஆம் தேதி நடைபெறும் அரையிறுதியில் இந்திய அணி பெல்ஜியம் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
மேலும் படிக்க: ஒலிம்பிக் பேட்மிண்டன் - வெண்கலம் வென்றார் பி.வி.சிந்து!