டெக்னாலஜி, படிப்பு, பாலின சமத்துவம்னு பல விஷயங்கள் வளர்ந்து நிக்கு இன்னைய இந்தியாவுலேயே பெண்கள் விளையாட்டு வீராங்கனையா வர்றது ரொம்பவே கஷ்டமான விஷயமா இருக்குது.. அப்போ சுதந்திரம் வாங்குன புதுசுல இந்தியாவுல பெண்கள் விளையாட்றது அப்படிங்குறது எல்லாம் நினைச்சுக்கூட பாக்க முடியாத விஷயமாதான் இருந்துருக்கு…


1931ம் வருஷம் ஜூலை 31-ந் தேதி பிறந்தவங்கதான் மேரி டிசோசா. நடுத்தர குடும்பத்துல பிறந்த மேரிக்கு மொத்தம் 12 அண்ணன்-தங்கச்சி இருந்தாங்க.. மும்பையில இருக்கற செயின்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளிக்கூடத்துல தான் மேரி படிச்சாங்க.. அந்த பள்ளிக்கூடத்துக்குனு தனியா கிரவுண்ட் எல்லாம் கிடையாது. அப்போ ஒருநாள் மேரிக்கு அவங்க அண்ணனுங்க ஹாக்கி விளையாட்டை அறிமுகப்படுத்திருக்காங்க.. அங்க இருந்த முனிசிபல் கிரவுண்ட்ல மேரி, அவங்க அண்ணனுங்க, அப்புறம் அந்த ஏரியா பசங்க எல்லாரும் சேந்து ஹாக்கி விளையாடிருக்காங்க.




ஒருநாள் மேரி ஓடுறதை பாத்த அவங்க அண்ணன் மேரியோட வேகத்தை பாத்து பிரமிச்சு போயிருக்காரு… உடனே அங்க நடந்த உள்ளூர் ஓட்டப்பந்தயத்துல மேரியோட பெயரை பதிவு பண்ணிட்டாரு.. மேரியோட தடகள வாழ்க்கை அங்கதான் தொடங்குனுச்சுனு சொல்லனும்..  வயசுப் பொண்ணான மேரி ஆண்கள் பள்ளிக்கூடமான செயின்ட் ஆண்ட்ரூஸ் பள்ளிக்கூடத்துல போயி பயிற்சி எடுத்தாங்க.. 1951ம் ஆண்டு டெல்லியில ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்துச்சு.. அந்த போட்டியில மேரி டிசோசா பங்கேற்றாங்க.. அவங்களோட நீலிமா கோஷ் உள்பட வேறு சில இந்திய வீராங்கனைகளும் களமிறங்குனாங்க.. இந்தியாவுக்காக அதிகாரப்பூர்வமாக களமிறங்குன முதல் தடகள அணி அதுதான்… இன்னைக்கு இருக்குற மாதிரி பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட்னு எல்லாம் யாருமே அன்னைக்கு கிடையாது.. 


பயிற்சியாளரே இல்லாம களமிறங்குன மேரி அந்த போட்டியில 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்துல வெள்ளிப்பதக்கத்தை ஜெயிச்சாங்க.. 200 மீட்டர்ல வெண்கலப்பதக்கத்தை ஜெயிச்சு அசத்துனாங்க.. இந்த போட்டிக்கு பிறகு இந்தியாவோட முதல் தடகளப் பெண்கள் டீமான மேரி டிசோசா உள்ளிட்ட சில வீராங்கனைகளுக்கு இந்தியாவோட முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், இந்தியாவோட முதல் பிரதமர் நேருவை சந்திக்குற வாய்ப்பு கிடைச்சுருக்கு..  அப்போ இருந்த அரசாங்கம் அவங்களுக்கு பரிசோ, ஊக்கத்தொகையோ ஏதும் கொடுக்கல… நேருவும், மவுண்ட்பேட்டனும் கையெழுத்து மட்டும்தான் பரிசா கிடைச்சுச்சு… அன்னைக்கு ஆட்டோகிராப் அப்படிங்குற விஷயம் மிகப்பெரிய கவுரவமான ஒன்னா இருந்துச்சு.





மேரி டி சோசா ஆசியன் கேம்ஸ் வெற்றி பத்தி சொன்னப்ப, "எங்களுக்கு ஒரு சின்ன வரவேற்புகூட கிடைக்கல. எங்கம்மா எனக்கு சிக்கன் செஞ்சு தந்தாங்க.. அதுதான் எனக்கு பரிசு"னு சொன்னாங்க.. மேரி டிசோசாவோட திறமையால அவங்களுக்கு 1952ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்ல விளையாட சான்ஸ் கிடைச்சுச்சு… அங்க அவங்க எந்த பதக்கத்தை ஜெயிக்காட்டினாலும் இந்தியாவுக்காக தடகளப் போட்டியில பங்கேற்ற முதல் டீம்ல இருந்த வீராங்கனைங்குற சாதனையை படைச்சாங்க.. 1956ம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக்ல விளையாட மேரி டிசோசாவுக்கு திரும்பவும் வாய்ப்பு கிடைச்சுச்சு.. ஆனா போதுமான நிதி இல்லனு சொல்லி அவங்களால போக முடியல.. 


1954ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவுல நடந்த தடகளப் போட்டியில 400 மீட்டர் ரிலே பிரிவுல மேரி டி சோசா தங்கம் வாங்கி அசத்துனாங்க.. அதுமட்டுமில்லமாக 100 மீட்டர், 200 மீட்டர், 800 மீட்டர் பிரிவுலயும் மேரி டி சோசா நிறைய சாதனைகளை படைச்சுருக்காங்க.. விளையாட்டு வாழ்க்கையில எவ்வளவு முக்கியம்ங்குறதை மேரி ரொம்பவே அழகா சொல்லிருக்காங்க… “பதக்கங்களை வாங்குறதும், ஜெயிக்குறதும் மட்டும் விளையாட்டு இல்ல. வாழ்க்கை அப்படிங்குற விளையாட்டுல எப்படி வெற்றி, தோல்விகளை அணுகனும்ங்குறதை விளையாட்டுதான் உங்களுக்கு சொல்லித்தரும்”னு ரொம்பவே அழகா சொல்லிருக்காங்க.. 




தடகள வீராங்கனையா மட்டுமில்லமா 1953ல இங்கிலாந்துல இந்தியன் டீமுக்காக ஹாக்கியும் டிசோசா விளையாடிருக்காங்க.. 1956ல இந்தியாவுக்காக ஆஸ்திரேலியாவுல ஹாக்கி விளையாடிருக்காங்க.. முதல் குடியரசுத் தலைவரால பாராட்டப்பட்ட மேரி டி சோசாவிற்கு நாட்டோட 13வது குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி 2013ம் வருஷம் விளையாட்டுத் துறையோட உயரிய விருதான தயான்சந்த் விருதை வழங்கி கவுரவிச்சாரு.. 
பயிற்சியாளரே இல்லாம இந்தியாவுக்காக பதக்கத்தை வாங்குன மேரி டிசோசாவோட வாழ்க்கை வரலாறு You Cant Eat Your Frame-னு வெளியாயிருக்கு… தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இருந்தா எந்த சூழ்நிலையிலயும் ஜெயிக்கலாம்ங்குறதுக்கு மேரி டிசோசா மிகப்பெரிய உதாரணம்.


அடுத்து வரும் தொடர்களில் இன்னும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை பார்க்கலாம்.


மேலும் படிக்க : Untold Stories Episode 12 : ஓட்டு வீடு முதல் ஒலிம்பிக் வரை..! இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டனின் அசாத்திய பயணம்..!


Untold Stories Episode 13 : வாழ்வை முடக்கிய விபத்து..! துப்பாக்கித் தந்த புதுவாழ்வு..! அக்னிப்பறவையாய் மாறிய அவனிலேகரா..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண