IND vs ENG: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வரும் நிலையில், இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் மான்செஸ்டரில் களமிறங்குகிறது.

ஒரு வெற்றிகூட இல்லை:

மான்செஸ்டரில் இந்திய அணி ஆட உள்ள ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானம் இந்திய அணிக்கு மிகவும் மோசமான மைதானமாகவே அமைந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. இந்த மைதானத்தில் 1936ம் ஆண்டு முதல் கிரிக்கெட் ஆடி வரும் இந்திய அணி இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடி ஒன்றில் கூட வெற்றி பெற்றதே இல்லை. 

சதம் அடித்தே 35 ஆண்டுகள்:

இந்த மைதானத்தில் இந்திய வீரர் ஒருவர் கடைசியாக சதம் விளாசியே 35 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த கடைசி சத்திற்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர். அதாவது, 1990ம் ஆண்டு இந்திய அணி இதே ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் ஆடியது. முகமது அசாருதின் கேப்டனாக இருந்த அப்போதைய இந்திய அணியில்  கபில்தேவ், ரவி சாஸ்திரி, திலீப் வெங்க்சர்கார், மனோஜ் பிரபாகர் போன்ற சீனியர் வீரர்களுடன் இளம் சிறுவனாக களமிறங்கினார் சச்சின் டெண்டுல்கர். 

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி கிரஹாம் கூச், மைக் ஆதர்டன், ராபின் ஸ்மித் ஆகியோரது சதத்தால் 519 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 93 ரன்கள், சச்சின் டெண்டுல்கர் 68 ரன்கள் எடுக்க கேப்டன் அசாருதின் 179 ரன்கள் எடுக்க இந்தியா 432 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து ஆலன் லாம்பின் சதம், ராபின் ஸ்மித் மற்றும் மைக் ஆதர்டன் அரைசதத்தால்  320 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, இந்திய அணிக்கு 408 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

17 வயதிலே சதம்:

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி 12 ரன்னிலும், நவ்ஜோத் சித்து டக் அவுட்டும் ஆக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 50 ரன்கள் எடுக்க, திலீப் வெங்சர்கார் 32 ரன்கள் எடுத்து அவுட்டாக, கேப்டன் அசாருதினும் 11 ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது சச்சின் டெண்டுல்கர் களமிறங்கினார். 

வெறும் 17 வயதே ஆன சிறுவனுடன் கபில்தேவ் ஜோடி சேர்ந்து ஆடினார். அவரும் 26 ரன்களுக்கு அவுட்டாக,, 183 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியின் தோல்வி ஏறத்தாழ உறுதியானது. ஆனால், அப்போது சீனியர் வீரரான மனோஜ் பிரபாகரை வைத்துக்கொண்டு இங்கிலாந்தின் வெற்றியை சிதைத்தார் டீன் ஏஜ் சிறுவன் சச்சின் டெண்டுல்கர்.

அந்த அணியில் இடம்பிடித்த இங்கிலாந்தின் ஆபத்தான பவுலர்கள் மால்காம், ப்ராசேர், ஹெம்மிங்ஸஸ், கிறிஸ் லிவீஸ் ஆகியோரது பந்துவீச்சை திறம்பட சமாளித்தார் சச்சின் டெண்டுல்கர். அபாரமாக ஆடிய அவர் அரைசதம் விளாசினார். அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த மனோஜ் பிரபாகரும் அரைசதம் விளாசினார். அரைசதம் கடந்த சச்சின் டெண்டுல்கர் தனது அபார திறமையால் சதம் விளாசினார். 

ஆட்டம் டிரா:

சதம் விளாசியது மட்டுமின்றி அந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்வியையும் மாற்றினார். இதனால், இதன்பின்பு இந்திய அணியின் விக்கெட்டை வீழ்த்த முடியாது என்ற முடிவுக்கு வந்த இங்கிலாந்து கேப்டன் கிரஹாம் கூச் ஆட்டத்தை டிராவாக முடித்துக்கொள்ள ஒத்துக்கொண்டார். இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 343 ரன்களை எடுத்திருந்தது.

சச்சின் டெண்டுல்கர் 189 பந்துகளில் 17 பவுண்டரியுடன் 119 ரன்களும், மனோஜ் பிரபாகர் 128 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 67 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய சச்சின் டெண்டுல்கர் விளாசிய முதல் சதம் இதுவே ஆகும்.

அந்த போட்டிக்கு பிறகு ஒரு இந்திய வீரர்கூட மான்செஸ்டரில் சதம் விளாசவே இல்லை. 

மான்செஸ்டரில் சதம் விளாசிய இந்திய வீரர்கள் யார்? யார்?

1. விஜய் மெர்சண்ட் - 114 ரன்கள் - 25 ஜுலை 1936

2. சையத் முஷ்டாக் அலி - 112 ரன்கள் - 25 ஜுலை 1936

3. பாலி உம்ரிகர் - 118 ரன்கள் - 23 ஜுலை 1959

4. அப்பாஸ் அலி - 112 ரன்கள் - 23 ஜுலை 1959

5. சுனில் கவாஸ்கர் - 101 ரன்கள் - 6 ஜுன் 1974

6. சந்தீப் பாட்டீல் - 129 ரன்கள் - 24 ஜுன் 1982

7. முகமது அசாரூதீன் - 179 ரன்கள் - 9 ஆகஸ்ட் 1990

8. சச்சின் டெண்டுல்கர் - 119 ரன்கள் - 9 ஆகஸ்ட் 1990 

மொத்தம் 8 இந்தியர்கள் மட்டுமே மான்செஸ்டரில் சதம் விளாசியுள்ளனர்.